ஈரான் முன்னாள் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவரிடம் இவான்கா ட்ரம்பின் புளோரிடா இல்லத்தின் வரைபடம் மற்றும் இவான்கா, ஜாரெட் குஷ்னர் தங்கியிருந்த பகுதியின் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களது பாதுகாப்பு உங்களை காப்பாற்றாது” என மிரட்டல் பதிவுகளையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
துருக்கியில் கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதுடன், பல தாக்குதல் மற்றும் தாக்குதல் முயற்சிகள் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா - வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று (23) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை, அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்தை ஒட்டியுள்ள வீதியொன்றில் நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் அமெரிக்க இரகசிய உளவுத்துறை மற்றும் பொலிஸ் படையினர், உடனடியாகச் செயற்பட்டு அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சமரில், சந்தேகநபர் படுகாயமடைந்தார்.
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அருகிலிருந்த மற்றொரு பொதுமகனும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் நடந்த வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, வளாகத்தின் பாதுகாப்பு உச்சகட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.