ஈரானிய வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன 'MQ-9' ரக ஆளில்லாப் போர் விமானத்தை (Drone) தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், அங்கு நுழைந்த மற்றுமொரு அமெரிக்கப் போர் விமானத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகமான 'அல் ஜசீரா' (Al Jazeera) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரானிய வான் எல்லைக்குள் அத்துமீறிய "RQ-4 ரக ட்ரோன் மற்றும் எஃப்-35 (F-35) ரக போர் விமானம்" ஆகியவற்றின் மீது ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக புரட்சிகர காவல்படை குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவங்கள் எப்போது நிகழ்ந்தன என்ற துல்லியமான விபரங்களை ஈரான் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிராக "சட்டபூர்வமான மற்றும் உறுதியான" முறையில் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவர் (Supreme Leader) மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) விடுத்துள்ள விசேட அறிக்கையில்:
"மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள நாடுகள் இனிமேலும் அமெரிக்காவின் இராணுவத் தளங்களைப் பாதுகாக்கும் ஒரு 'கேடயமாக' (Shield) செயற்படப் போவதில்லை. அத்துடன், அமெரிக்கப் படைகளுக்கு இனி இந்தப் பிராந்தியத்தில் எந்தவொரு 'பாதுகாப்பான புகலிடமும்' (Safe Haven) கிடையாது."
மேலும், லெபனான் உள்ளிட்ட 'எதிர்ப்பு அச்சு' (Axis of Resistance) படைகளின் வெற்றிகளைப் பாராட்டியுள்ள அவர், ஈரானின் ஆதரவு பெற்ற மறைமுகப் படைகள் (Proxy Forces) அமெரிக்காவிற்கும் 'சியோனிச அரசிற்கும்' (இஸ்ரேல்) தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தற்பாதுகாப்புத் தாக்குதல்" என அமெரிக்கா நியாயவாதம்!
ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு முன்னர், நேற்று நள்ளிரவு தெற்கு ஈரான் பகுதியிலுள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை (Mines) வைக்க முயன்ற ஈரானியப் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) ஊடகப்பேச்சாளர் கப்டன் டிம் ஹாக்கின்ஸ் (Captain Tim Hawkins) கருத்துத் தெரிவிக்கையில், "எமது படைகளுக்கு ஈரானியப் படைகளிடம் இருந்து ஏற்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவே, தெற்கு ஈரானில் இன்று இந்தத் தற்காப்புத் தாக்குதல்களை (Self-defence strikes) அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தன" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையே ஆரம்பமான மிக பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) இரு நாடுகளினதும் இந்தத் தொடர் இராணுவத் தாக்குதல்கள் தற்பொழுது முற்றாக முறியடித்துள்ளன.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை (Energy Flows) முடக்கி, சர்வதேசப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ள இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த பின்னணியிலேயே இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை (Hezbollah) முற்றாக "அழிப்போம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்துள்ளமையானது, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மேலும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் லெபனான் போருக்கும் பொருந்தும் வகையில் அமைய வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.