கென்னடி சென்டருடன் 'ட்ரம்ப்' பெயரை இணைக்க நீதிமன்றம் அதிரடித் தடை; மூடும் திட்டமும் முடக்கம்!

கென்னடி சென்டருடன் 'ட்ரம்ப்' பெயரை இணைக்க நீதிமன்றம் அதிரடித் தடை; மூடும் திட்டமும் முடக்கம்!

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைநிகழ்ச்சி மையமான 'கென்னடி சென்டர்' (Kennedy Center) கட்டடத்தைப் பல வருட காலப் புனரமைப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடுவதற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளார். அத்துடன், இந்த வரலாற்று மையத்தின் பெயருடன் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரை இணைப்பதற்கு அதன் நிர்வாகச் சபை எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி கேசி கூப்பர் (Casey Cooper) தனது 94 பக்கத் தீர்ப்பில் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்:

"இந்த கலை மையத்தை நிறுவுவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த மையம் அதிபர் கென்னடியின் (President Kennedy) நினைவாக மட்டுமே பெயரிடப்பட வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகச் சபையின் தன்னிச்சையான தீர்மானத்தின் அடிப்படையில் இதற்கு வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ பெயரையோ அல்லது பொது நினைவுப் பெயரையோ சூட்ட முடியாது. காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே இந்த மையத்திற்குப் பெயரிட்டது, எனவே அந்தப் பெயரை மாற்றும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு."

"என்னை அநீதியாக நடத்துகிறார்கள்" – பின்வாங்குகிறார் ட்ரம்ப்!

இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, கலை மையத்தை மாற்றியமைப்பதற்கான தனது முயற்சியிலிருந்து தான் பின்வாங்குவதாக அதிபர் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இதன் முகாமைத்துவக் கட்டுப்பாட்டை நாடாளுமன்றத்திடம் (Congress) ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்:

"இந்த நிறுவனத்தை முழுமையாக நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதற்கும், அதன் இயக்கம், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பொறுப்புகளை அவர்களிடம் வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு நான் வர்த்தகத் திணைக்களத்திற்கு (Department of Commerce) உத்தரவிட்டுள்ளேன். நான் இங்கு அநீதியான முறையில் நடத்தப்பட்ட போதிலும், எனது விருப்பப்படி சுதந்திரமாகச் செயற்பட அனுமதி இல்லை என்றால், இதில் தொடர்ந்து ஈடுபட எனக்கு எவ்வித விருப்பமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜோன் எஃப். கென்னடியின் நினைவகமாக இது நிறுவப்பட்டது முதல், இதன் அறங்காவலர் குழுவைக் கண்காணிக்கும் அதிகாரம் நாட்டின் நிறைவேற்றுப் பிரிவிடமும் (அதிபர் தரப்பு), இதற்கான வருடாந்த நிதி ஒதுக்கீட்டுப் பொறுப்பு நாடாளுமன்றத்திடமும் (Congress) காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்குள் 'ட்ரம்ப்' பெயர் பலகைகளை அகற்ற உத்தரவு!

நீதிமன்றத் தீர்ப்பின்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கென்னடி சென்டர் கட்டடத்திலோ அல்லது அதன் வளாகத்திலோ உள்ள ட்ரம்பின் பெயர் தாங்கிய அனைத்துப் பெயர் பலகைகளும் (Signage) உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அதேபோன்று, அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் 'ட்ரம்ப கென்னடி சென்டர்' (Trump Kennedy Center) அல்லது 'டொனால்ட் ஜே. ட்ரம்ப் மற்றும் ஜோன் எஃப். கென்னடி கலைகளுக்கான நினைவு மையம்' ஆகிய பெயர்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு (Appeal) செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கென்னடி சென்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கலாசார மையத்திற்கு அதிபர் ட்ரம்ப் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான நிர்வாகச் சபையின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கும் எனத் தங்களின் பொதுஜனத் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் ரோமா தராவி (Roma Daravi) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்டடப் புனரமைப்புக்கு அனுமதி!

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட நீதிபதியான கேசி கூப்பர், பல தசாப்தங்கள் பழமையான இக்கட்டடத்தின் புனரமைப்புப் பணிகளை (Renovations) தொடர அனுமதித்துள்ளார்.

எனினும், மையத்தை முழுமையாக மூடுவதற்கு முன்னர், சட்டரீதியாக எப்போதும் அங்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்ற விதியைத் தங்களின் மூடல் திட்டம் எவ்வாறு பாதிக்காது என்பதை நிர்வாகச் சபை விரிவாக ஆராய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கென்னடி சென்டர் கட்டடத்தின் காற்றோட்ட வசதிகள் (HVAC), கூரைத் தகடுகள், வடிகால் அமைப்புகள் மற்றும் திரையரங்கு ஆசனங்களை அவசரமாகப் புனரமைக்க வேண்டிய தேவை உள்ளதாக அதன் நிர்வாகத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.