சிறையிலுள்ள தமிழ் கலைஞரின் விடுதலைக்காக வடக்கில் பாரிய போராட்டம்!

சிறையிலுள்ள தமிழ் கலைஞரின் விடுதலைக்காக வடக்கில் பாரிய போராட்டம்!

கிளிநொச்சி: புரட்சிகர வரிகளைக் கொண்ட பாடலொன்றைப் பாடி சமூக ஊடகங்களில் பதிவேற்றியமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இளம் தமிழ் இசைக் கலைஞரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்களிடையே 'ஹிப்ஹொப் சங்கீ' (HipHop Sangee) எனப் பிரபலமான 24 வயதுடைய கணேஷ் குமார் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, ஜூன் 06ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இப்பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்குமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மிகவும் அவதானமாகவே இச்சட்டம் பயன்படுத்தப்படும் என தற்போதைய அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட போதிலும், அதே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, குறித்த இளைஞர் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய புரட்சிகரப் பாடலில் "தமிழீழம்" என்ற வார்த்தை இடம் பெற்றிருந்ததாகக் குற்றம் சுமத்தியே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.

"ஜனநாயகத்தின் குரவளையை நரிக்கும் PTA சட்டத்தை உடனே நீக்கு!", "பாடல் பாடுவது பயங்கரவாதமா?", "தேசிய கலைஞனை உடனே விடுதலை செய்!", "தமிழ் மக்களின் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?", "சட்டத்தின் பெயரால் அரச பயங்கரவாதத்தை உடனே நிறுத்து!" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில், தமிழ் மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"வார்த்தைகளால் மட்டும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது" – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்

கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் இளம் இசைக் கலைஞர் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

"சங்கீதன் தனது பாடலின் ஊடாக மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்து தடுப்பில வைப்பது என்பது மனிதநேயத்திற்கும் மனித உரிமைகளுக்கும் அப்பாற்பட்ட செயலாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்."

ஜனாதிபதியின் வெறும் வார்த்தைகளால் மட்டும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் பின்வருமாறு வலியுறுத்தினார்:

"நாட்டில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டும் உண்மையான தேவை உங்களுக்கு இருக்குமாயின், வாக்குறுதி அளித்தபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக அහෝசி செய்து, அச்சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுங்கள்.

நீங்கள் ஆயுதங்களையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி இந்த மக்களின் உண்மைகளையும், அவர்களின் தேசிய விமோசனம் குறித்த கனவுகளையும், இளைஞர்களின் எழுச்சியையும் மறைக்க முயன்றால், இந்நாட்டின் நல்லிணக்கம் குறித்து நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் பொய் என்றே அர்த்தமாகும். நல்லிணக்கமும் அமைதியும் தேவையெனில், அநுரவின் அரசாங்கம் அதற்கு உடன்படுமாயின், முதலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குங்கள். அமைதியை நிலைநாட்டுங்கள். மக்கள் மீதான கைதுகளை நிறுத்துங்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள். சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். வெறும் வார்த்தைகள் மட்டும் எமது மக்களுக்கு விமோசனமாகாது. இந்த போராட்டத்தையும் தமிழ் மக்களின் சிந்தனைகளையும் கருத்திற் கொண்டு, அந்த இளைஞனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கிறோம்."

பாடலில் புலிகள் அமைப்பின் பெயரோ, சின்னங்களோ இல்லை – சட்டத்தரணி கேசவன்

கணேஷ் குமார் சங்கீதன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பாடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போற்றிப் பாடும் வரிகளோ, விடுதலைப் புலிகள் என்ற வார்த்தையோ அல்லது அவ்வமைப்பிற்குரிய சின்னங்களோ பயன்படுத்தப்படவில்லை என்றும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரோ, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பெயர்களோ குறிப்பிடப்படாத ஒரு புரட்சிகரக் கவிதை வடிவம் அதுவென்பதால், அவரைக் கைது செய்ததற்கான அடிப்படை என்னவென்று தமிழ் இளம் இசைக் கலைஞர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, கணேஷ் குமார் சங்கீதனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர், விடுதலைப் புலிகள் அமைப்பை உத்வேகப்படுத்தும் பாடல்களை ஆளுங்கட்சியினர் தமது தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.