தேசிய பாதுகாப்பின் பெயரால்  PTAஐ வைத்து ஆட்டிப்படைக்கும் திசைகாட்டி!

தேசிய பாதுகாப்பின் பெயரால்  PTAஐ வைத்து ஆட்டிப்படைக்கும் திசைகாட்டி!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது, அவர் கடுமையான மன ரீதியான மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அவரது மனைவியினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் மற்றும் நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட விபரங்கள் சமூகத்தில் பலத்த அவதானத்தைப் பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் (Detention Order) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் உள்ள சலே, தற்கொலை செய்துகொள்ளும் ஆபத்தான மனநிலையில் உள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரியின் (JMO) அறிக்கைகள்கூட சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தச் சம்பவமானது வெறும் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட விசேட உயர் அதிகாரிக்கு மாத்திரமோ சுருங்கிவிடக் கூடியதொன்றல்ல. இது இந்நாட்டின் சட்டத்தின் ஆட்சி (Rule of Law), அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் ஒழுக்கநெறி குறித்து பாரிய பல கேள்விகளை சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உள்ள மிகவும் கவலைக்குரிய மற்றும் அச்சமூட்டும் அம்சம் என்னவெனில், இந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் மிக உயர்ந்த பதவியொன்றை வகித்த, அரச கட்டமைப்பு மற்றும் சட்டம் எவ்வாறு கிரியையாற்றுகின்றது என்பதை நன்கு அறிந்த ஒரு விசேட உயர் அதிகாரிக்குக் கூட, அரச காவல் ஸதுறையின் கீழ் இருக்கும் போது தனக்கான பாதுகாப்பையும் மனிதநேயமிக்க நடாத்துகையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் போயுள்ளமையாகும்.

பாதுகாப்புத் துறைகளின் மிக உயர்ந்த தொடர்புகளையும் சட்டப் பிரதிநிதித்துவத்தையும் கொண்ட ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானிக்கே குற்றப்புலனாய்வுத் திணைக்களக் கூண்டுகளுக்குள் அமானுஷமான, கொடூரமான மற்றும் அவமதிப்பான நடாத்துகைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது எனில், எவ்வித அதிகாரமும், செல்வமும் அல்லது அடையாளமும் இல்லாத இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகன் இவ்வாறானதொரு இடத்தில் எதிர்கொள்ளும் விதி எப்படியாக இருக்கக் கூடும்?

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாடு இவ்வாறான சம்பவங்களின் ஊடாகத் தகர்க்கப்படுவதுடன், விசாரணைக்காக நபர்களைத் தடுப்புக் காவலில் வைக்கும் போது இடம்பெறும் செயன்முறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒரு கடுமையான அச்சமே நிலவுகின்றது.

ஒரு சந்தேகநபர் எவ்வளவு கடுமையான குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், அவருக்கு சித்திரவதைகளை இழைப்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின்படி முற்றாகத் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகும்.

இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரையின் (Article 11) மூலம், எந்தவொரு நபரும் சித்திரவதைகளுக்கு அல்லது கொடூரமான, அமானுஷமான அல்லது அவமதிப்பான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்ற முற்றுமுழுதான (Absolute) அடிப்படை உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான சட்டம்: இந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி, சித்திரவதை செய்வது என்பது பிணை வழங்கப்பட முடியாத, கடுமையான சிறைத்தண்டனைக்குரிய ஒரு குற்றவியல் குற்றமாகும்.

விசாரணை அதிகாரிகளின் பணி என்பது அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூர்வ சான்றுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதே தவிர, சந்தேகநபர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ சிதைத்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வது அல்ல.

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, தடுப்புக் காவலில் உள்ள ஒரு நபரின் உயிரையும் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் முழுமையான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

இச்சம்பவத்தின் அரசியல் பரிமாணத்தை நோக்கும் போது, தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடுமையான விவிமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

பல வருடங்களாக இந்நாட்டின் சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் கூட எதிர்க்கட்சியில் இருந்தபோது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஜனநாயகத்தை ஒடுக்கும், சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் ஒரு கொடூரமான (Draconian) சட்டம் என்றே வர்ணித்தனர். அச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அன்று அவர்கள் குரலெழுப்பினர்.

ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அந்த ஒடுக்குமுறை சட்ட விதிகளையும் நிறைவேற்று அதிகார தடுப்புக்காவல் உத்தரவுகளையும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு திசைகாட்டி அரசாங்கம் முற்படுவது, அவர்களின் அரசியல் கொள்கையிலுள்ள முரண்பாட்டையும் ஒழுக்கநெறிக்கு முரணான தன்மையையும் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆட்சியாளர்கள் மாறினாலும் பழைய ஒடுக்குமுறை கருவிகள் அவ்வாறே பயன்படுத்தப்படுமாயின், அவர்கள் வாக்குறுதி அளித்த “மாற்றம்” என்பது வெறும் தேர்தல் கோஷங்களுக்கு மாத்திரமே சுருங்கிப்போயுள்ளது என்பதை சிவில் சமூகம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சதியாளர்களையும் அதற்குக் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது நாட்டின் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

எனினும், அது சட்டத்தினால் நியமிக்கப்பட்டுள்ள உரிய வழிமுறைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே, சுரேஷ் சலே தொடர்பாக அவரது மனைவியும் சட்டத்தரணிகளும் முன்வைக்கும் சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக சுயாதீனமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், அரசியல் இலாபங்களுக்காக எந்தவோர் அரசாங்கத்தினாலும் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்கி, இலங்கையின் அனைத்துக் குடிமக்களினதும் மனித உரிமைகளையும் சமத்துவ உரிமையையும் உறுதிப்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.