தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஈரான் மற்றும் இஸ்ரேல் முடிவு; போர் நிறுத்தம் மீறப்பட்டால் மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை!

தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஈரான் மற்றும் இஸ்ரேல் முடிவு; போர் நிறுத்தம் மீறப்பட்டால் மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தமக்கிடையேயான தற்போதைய மோதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் நாட்டின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

சிப்சுபா (Sifsufa), மேரோன் (Meron), ஓர் ஹகனுஸ் (Or HaGanuz) மற்றும் ஸ்டே எலியேசர் (Sde Eliezer) உள்ளிட்ட இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலுள்ள பல இடங்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் "பகுதிச் செயல்பாட்டு நிலைக்கு" (Partial activity level) மாற்றப்படும்.

இதன் மூலம் பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் உட்புறங்களிலோ அல்லது குண்டுவீச்சு பாதுகாப்பு அறைகளுக்கு (Bomb shelters) அருகிலுள்ள இடங்களிலோ இயங்க முடியும். அத்துடன் வெளிப்புறங்களில் 100 பேர் வரையிலும், உட்புறங்களில் 400 பேர் வரையிலும் ஒன்றுூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

இரு நாடுகளும் ஒன்றையொன்று நோக்கி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, தற்போதைய மோதல் சுற்றை நிறுத்திக் கொள்வதாக ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பும் சமிக்ஞை காட்டியுள்ள நிலையிலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரானின் வான்பரப்பு

இன்றைய தினத்தின் ஆரம்பத்தில் இரத்து செய்யப்பட்டிருந்த விமானச் சேவைகள் சில மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஊடகங்களின்படி, "இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன" என அதிகாரிகள் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டின் வான்பரப்பு "மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக" அபுசார் ஷிரூடி (Abouzar Shiroudi) தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மீண்டும் ஆரம்பமாகியுள்ள தாக்குதல்கள் குறித்த அண்மைக்கால நிலவரங்கள் வருமாறு:

இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தான் நிறுத்தியுள்ளதாக ஈரான் இன்று அறிவித்துள்ளது. எனினும், லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடருமானால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) அண்மையில் கூறுகையில், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து செயற்படும் என்றார்.

அத்துடன், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஹிஸ்புல்லா அமைப்பினர் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளனர்" எனக் குற்றம் சுமத்தியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்படவுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறுமாறு உள்ளூர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், "எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் நாடு பின்வாங்காது" என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது 'எக்ஸ்' (X) சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவுடன் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல்

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஈரான்-இஸ்ரேல் இடையேயான பரஸ்பர தாக்குதல்கள் குறித்து கலந்துரையாடியதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், "இறுதி இலக்கு எட்டப்படவுள்ள" இந்தத் தருணத்தில் "அனைத்துத் தரப்பினரும்" நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பாவில், ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) "கடற்படை போக்குவரத்தை கட்டுப்படுத்தியமைக்காக" ஈரானியர்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளதாக அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக இன்றைய தினத்தின் ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

முன்னதாக, ஈரானின் பெட்ரோ கெமிக்கல் ஆலை இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலுள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலை ஒன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்திருந்தது.

பெய்ரூட் மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் ஈரான் நடத்திய தாக்குதல்களை இஸ்ரேலினால் சும்மா கடந்து போக முடியாது என்பதை அவர்கள் கணக்கிட்டிருப்பார்கள்.

ஆனால், இங்கு ஈரானின் கணக்கீடும் மிக முக்கியமானது: ஈரானிய தலைமைத்துவம் இஸ்ரேலியர்களைப் போலவே டொனால்ட் ட்ரம்பையும் சோதித்துப் பார்க்கின்றது.

அமெரிக்காவை சோதிக்கும் ஈரான்

டெஹ்ரான் (ஈரான்) வாஷிங்டனிடமிருந்து (அமெரிக்கா) குறைந்தது இரண்டு முக்கிய விடயங்களை முதன்மையாக எதிர்பார்க்கிறது: முதலாவது, முடக்கப்பட்ட நிதியைப் பெற்றுக்கொள்வது (குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது).

மற்றையது, லெபனானில் உள்ள தனது நட்பு அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலின் தீவிரப் போக்கைத் தடுப்பதாகும்.

இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம், வாஷிங்டன் எந்தளவிற்குப் பதிலடி கொடுக்கும் என்பதையும் ஈரான் சோதித்துப் பார்த்தது. ட்ரம்பின் தற்போதைய பொறுமைத் தன்மை குறைவாக உள்ளதாக ஈரான் உணர்ந்தாலும், ஒவ்வொரு நடவடிக்கையும் அவரது பொறுமையைச் சோதிப்பதாகவே அமையும்.

ட்ரம்ப் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு - குறைந்தபட்சம் பகிரங்கமாக - நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்ததுடன், அமெரிக்காவை இந்த மோதலில் இருந்து தூர விலக்கியே வைத்துள்ளார்.

எனவே, போர்க்களத்தில் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலமும், பேச்சுவார்த்தை மேசையில் அமெரிக்காவிடம் தடைகளைத் தளர்த்தி, தனது எண்ணெய் வருவாயில் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டொலர்களைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும், தமக்கு இன்னும் கணிசமான சாதகமான வாய்ப்புகள் (Leverage) இருப்பதாக ஈரானியத் தலைவர்கள் கருதுகின்றனர்.