பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள மிண்டானாவோ (Mindanao) தீவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 07:37 மணிக்கு (GMT ஞாயிறு 23:37) ஏற்பட்டுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களின் பின்னர் இந்த எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டதுடன் அவற்றின் வீரியம் குறைக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழும் காட்சிகளும், பிரபல 'ஜொலிபி' (Jollibee) உணவகம் ஒன்று முற்றாக இடிபாடுகளாக மாறியுள்ள காட்சிகளும், சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள பதிவுகளும் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட அண்மைக்கால விபரங்களின்படி, நாட்டின் சிவில் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளதாவது: உயிரிழந்தவர்களில் 31 பேர் சொக்சார்கன் (Soccsksargen) பிராந்தியத்திலும், ஏனைய நால்வர் டவாவோ (Davao) பிராந்தியத்திலும் பதிவாகியுள்ளனர். அத்துடன், இந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 134 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 10,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாதாக 32 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான மிண்டானாவோவில் சுமார் 26 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
"மிண்டானாவோவை நாங்கள் கைவிட மாட்டோம்" - ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்
பல்வேறு உள்ளூர் மூலங்களின் தரவுகளை சரிபார்த்து உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (National Disaster Agency) மூலம், இந்த உயிரிழப்பு விபரங்கள் வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் விடுத்துள்ள அறிக்கையில், பேரிடர் மீட்பு முகமைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். "தேசிய அரசாங்கம் விரைந்து செயல்பட்டு வருகின்றது, நாங்கள் மிண்டானாவோவை கைவிட மாட்டோம்" என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், பிலிப்பைன்ஸில் புதிய பாடசாலை கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் முதல் நாளான இன்றைய தினமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலை வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டவாவோ ஆக்ஸிடென்டல் (Davao Occidental) மாகாணத்திலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றினால் வெளியிடப்பட்ட காணொளியில், நிலம் நடுங்கும்போது டஜன் கணக்கான மாணவர்கள் பயத்துடன் தரையில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அவர்களின் பின்னாலிருந்த தகரக் கூரையுடனான தங்குமிடம் ஒன்று இடிந்து விழுவதையும் அந்த காணொளி காட்டுகிறது, எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
130 க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவு
முதலாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1.3 முதல் 6.7 வரையிலான ரிக்டர் அளவுகளில் 130 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுயுள்ளன. அத்துடன், உள்ளூர் நேரப்படி இரவு 22:52 மணியளவில் சரங்கனி (Sarangani), பலுட் (Balut) தீவின் கடற்பரப்பிலும் 5.7 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புவிப்பொதியியல் ரீதியாக நிலையற்ற "நெருப்பு வளையம்" (Ring of Fire) பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும். பெரும்பாலான நிலநடுக்கங்கள் சிறியவையாகவும் பாதிப்பின்றியும் கடந்து செல்லும் அதேவேளை, சில பேரழிவை ஏற்படுத்துகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய விசாயாஸ் (Visayas) பிராந்தியத்தில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
திங்கட்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், ஒரு மீட்டர் உயரமான சுனாமி அலைகள் தமது கரைகளைத் தாக்கக்கூடும் என ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். பின்னர், தெற்கு ஒகினாவா (Okinawa) மாகாணத்தில் சில சென்டிமீட்டர் உயரமான சிறிய அலையும், தொலைதூர ஓகசவரா (Ogasawara) தீவுகளில் 20 சென்டிமீட்டர் உயரமான அலையும் அவதானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியா, பலாவ் (Palau) மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளிலும் சுனாமி அலைகள் கண்டறியப்பட்டதுடன், அவற்றின் உயரம் சில சென்டிமீட்டர் முதல் 1.4 மீட்டர் வரை பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.