புலம்பெயர்வு விவகாரம், ஆயுதப் பெருக்கம் மற்றும் மனித உயிர் புனிதத்தன்மை குறித்து திருத்தந்தை லியோ XIV உரை!
பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய புதிய புலம்பெயர்வோர் ஒழுங்குமுறை திட்டத்திற்கு தீவிர வலதுசாரி கட்சி எதிர்ப்பு!
உலகம் "ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் கலாசார நெருக்கடியை" சந்தித்து வருவதாக ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திருத்தந்தை லியோ XIV (Pope Leo XIV) எச்சரித்துள்ளதுடன், "புலம்பெயர்வின் சோகமயமான நாடகம்" எனத் தாம் குறிப்பிட்டதன் காரணங்களையும் விளைவுகளையும் கையாளுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்ரித் நகரில் சட்டமியற்றுபவர்கள் மத்தியில் ஆற்றிய இந்த விரிவான உரையில், மோதல்கள், செயற்கை நுண்ணறிவு (AI), காலநிலை அவசரநிலை, கருக்கலைப்பு மற்றும் தயைக்கொலை (Euthanasia) ஆகிய விவகாரங்கள் குறித்தும் திருத்தந்தை தொட்டுப் பேசினார்.
"உலகம் ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் கலாசார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இது பல்வேறு வடிவங்களிலான வன்முறைகள், துருவமுனைப்பு மற்றும் பரஸ்பர அவநம்பிக்கை ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகிறது" என்று அவர் கூறினார். "இந்த சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, அமைதி என்பது வெறும் அரசியல் அபிலாஷை மட்டுமல்ல, அது ஒரு உண்மையான தார்மீகத் தேவையாகும்"
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைதிக்கான தேடலுக்கு "ராஜதந்திர துணிச்சலும், நெறிமுறைப் பொறுப்பும்" தேவை என்று திங்கட்கிழமை அரசியல்வாதிகளிடம் கூறிய திருத்தந்தை, ஆயுதங்கள் மூலம் பெறப்படும் "தற்காலிக அமைதியை" நாடாமல், சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்திப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உறுதியும் வேண்டும் என்றார்.
"இதனால்தான் ஐரோப்பா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில், சர்வதேச நிலப்பரப்பின் பலவீனத்திற்கு ஆயுதப் பெருக்கம் மீண்டும் ஒரு தவிர்க்க முடியாத பதிலாக முன்வைக்கப்படுவது கவலையளிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். "மறுபுறம், உண்மையான பாதுகாப்பு என்பது நீதி, பொறுமையான உரையாடல், சர்வதேச சட்டத்திற்கான மரியாதை மற்றும் போரினால் லாபம் ஈட்டும் நலன்களை விட மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையிலிருந்தே பிறக்கிறது"
என்றார்.
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் திருத்தந்தையின் முதல் உரை
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் திருத்தந்தை ஒருவர் ஆற்றிய முதல் உரையான இதன் பெரும் பகுதி புலம்பெயர்வு விவகாரத்திற்கே ஒதுக்கப்பட்டிருந்தது. ஸ்பெயினுக்கான தனது ஒரு வார காலப் பயணத்தில் இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்த லியோ உத்தேசித்துள்ளார். இப்பயணத்தில், ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு அபாயகரமான அட்லாண்டிக் கடல் வழியைப் பயன்படுத்தி வந்த மக்களை கனேரித் (Canaries) தீவுகளில் அவர் சந்திக்கவுள்ளார்.
முதலாவது அமெரிக்கத் திருத்தந்தையான இவர், ஏற்கனவே ஈரானில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை நடத்தும் விதம் குறித்து அந்த நிர்வாகத்துடன் முரண்பட்டிருந்தார். ஸ்பெயினின் சோசலிசத் தலைமையிலான அரசாங்கம், ஐரோப்பியப் போக்குகளுக்கு மாறாக 500,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோரின் நிலையை முறைப்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்கும் ஒரு சூழலிலேயே இவரது ஸ்பெயின் வருகை அமைந்துள்ளது.
குடிபெயர்ந்தவர்களின் பிள்ளைகள் உட்பட வெளிநாட்டினரைச் சேர்ந்த 8 மில்லியன் மக்கள் வரை நாடு கடத்தும் யோசனையை கடந்த ஆண்டு முன்வைத்த ஸ்பெயினின் தீவிர வலதுசாரி 'வொக்ஸ்' (Vox) கட்சியின் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் (Santiago Abascal), இந்த முறைப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் குடியேறிகளின் "ஊடுருவல்" என சாடியுள்ளார்.
ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களிடம் பேசிய லியோ, புலம்பெயர்ந்தோரை ஏற்றுப் பாதுகாப்பது நாடுகளின் தார்மீகக் கடமையாகும் என்று கூறினார்.
"அனைத்து மனிதர்களினதும் சமமான கண்ணியம் என்ற உலகளாவிய கோட்பாடு", மக்கள் தங்களின் தேசிய, இன, மத அல்லது மொழி அடிப்படையிலோ அல்லது பொருளாதார மற்றும் சமூக நிலை காரணமாகவோ பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படும்போது மீறப்படுகிறது”
என்று அவர் மேலும் கூறினார்.
"கருத்தரிப்பு முதல் இயற்கை மரணம் வரை மனித உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்"
புலம்பெயர்வுக்கு "பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வழித்தடங்களை" உருவாக்குமாறும், "ஒருங்கிணைப்பிற்கான உண்மையான சாத்தியக்கூறுகளை" ஏற்படுத்துமாறும் லியோ அழைப்பு விடுத்தார். ஆனால் அதேவேளை, அமைதியின்மை, பாதுகாப்பின்மை, மோசமான வாழ்வாதார நிலைமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அல்லது காலநிலை நெருக்கடியின் விளைவுகள் காரணமாக எவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லாத நிலையை உறுதிப்படுத்த உழைப்பதன் மூலம், புலம்பெயர்வுக்கான மூலக் காரணங்களைக் கையாளுமாறு அவர் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.
அவரது உரைக்கு நாடாளுமன்றில் ஏழு நிமிட கைதட்டல் பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், மனித உயிரின் புனிதத்தன்மை குறித்த திருச்சபையின் போதனையை அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவாக நினைவூட்டினார்.
"அனைத்து மனித உயிர்களும் கருத்தரித்ததில் இருந்து இயற்கை மரணம் வரை, அதன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று லியோ கூறினார். "இந்த நிச்சயம் மறைக்கப்படும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களே முதல் பலியாகிறார்கள், மேலும் சட்டம் அதன் ஆழமான அர்த்தத்தை இழக்கிறது"
என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்பெயினில் 1985 ஆம் ஆண்டு கருக்கலைப்பு குற்றமற்றதாக்கப்பட்டதுடன், 2010 ஆம் ஆண்டில் பெண்களுக்கு 14 வாரங்கள் வரையிலான கர்ப்பத்தை கலைப்பதற்கான உரிமை வழங்கும் சட்டம் தளர்த்தப்பட்டது. தயைக்கொலை சட்டம் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரோமன் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுடனான சந்திப்பு ஒன்றில் திருத்தந்தை திங்கட்கிழமை பிற்பகல் கலந்துகொள்ள உள்ளார். இச்சந்திப்பிற்கு முன்னதாக ஸ்பெயின் ஆயர்களிடம் பேசிய அவர், இந்தத் துஷ்பிரயோகத்தை "ஒரு சாபம்" என்று வர்ணித்ததுடன், திருச்சபை இதற்கு "செவிமடுத்தல், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றுடன் பதிலளிக்க வேண்டும்" என்றார். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில குழுக்கள், திருத்தந்தையுடனான சந்திப்புகளில் இருந்து தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குறை கூறியுள்ளன.