செம்மணி மனிதப்புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில் ஆறு மனித உடல்கள்!  

செம்மணி மனிதப்புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில் ஆறு மனித உடல்கள்!  

இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியின் 73ஆவது நாள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட 16 மனித உடல்களில், ஆறு உடல்கள் ஒரே கூட்டமாக (ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில்) காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 318 மனித உடல்களில் 302 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 19ஆவது நாளான ஜூன் 08 ஆம் திகதி திங்கட்கிழமை 4 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதுடன், நேற்று (08) புதிதாக வெளிப்பட்ட மனித உடல்களுக்கு மத்தியில் சிறுவர்களின் எலும்புப் பகுதிப் எச்சங்களும் காணக்கூடியதாக இருந்ததாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 100 க்கும் அருகாமையிலான தடையப் பொருட்களுக்குள் (தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்) கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.

2025 இல் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது, 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோச மனிதப்புதைகுழியாகும்.