தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை தற்சமயம் தவிடுபொடியாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஊழலற்ற அரசாங்கம் ஒன்றை அமைத்து, மக்களாட்சியை நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்தான் தற்போதைய தேசிய மக்கள் சக்தியை ஆட்சிபீடமேற்றினார்கள் நாட்டு மக்கள். ஆனால், ஆட்சியேறி இரண்டு ஆண்டுகளாவதற்கு முன்பாகவே, மக்கள் கொண்ட நம்பிக்கையைச் சிதைத்தெறியத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கின்றார்கள் என்பதைத் தட்டிக்கேட்க வக்கில்லாத அரசாங்கமாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவெடுத்திருப்பது பெரும் சாபக்கேடே.
நாட்டினுடைய மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்வனவு செய்வதில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசிய கணக்காய்வு அறிக்கைகூட தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனாலும், நாடாளுமன்றுக்குள் இருக்கின்ற தம் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோல்வியுறச் செய்ததனூடாகத் தாங்கள் தூய்மையானவர்கள் என்ற மாயையை மக்கள் மத்தியில் தற்போதைய அரசாங்கம் காட்ட முனைகிறது. அதன் உச்சகட்ட பம்மாத்து வேலையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்திருக்கிறார்.
இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் சார்பாக இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டபோது மற்றும் மின் உற்பத்தியின்போது முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்கவும் உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே, மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் பி.வி. பந்துலசேன நியமிக்கப்படுள்ளார்.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் செயல்முறைகளில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா, இல்லையா என்பதை ஆராய்தல் மற்றும் அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதா என மதிப்பிடுதல். குறித்த காலப்பகுதியில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதையும், கொள்முதல் செயல்முறை, விநியோக செயல்முறை, தரப் பரிசோதனை செயல்முறை, செயல்பாட்டு செயல்முறை மற்றும் பயன்பாட்டு செயல்முறை உள்ளிட்ட ஒட்டுமொத்த தொடர்புடைய செயல்முறைகளையும் விசாரணைக்கு உட்படுத்துதல். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, மின் உற்பத்தி அளவு எதிர்பார்க்கப்பட்ட வினைத்திறனுடன் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிதல். தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் செயல்முறையில் சட்ட மற்றும் நிதி முறைகேடுகள், சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்தல். இந்தச் செயல்முறையின் போது அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதையும், அவ்வாறு மீறப்பட்டிருந்தால் அந்த மீறல்களுக்கு எதிராகக் கொடுப்பனவுகளை நிறுத்துதல் அல்லது ஏனைய இழப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனவா என்பது குறித்து ஆராய்தல். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அதற்காகப் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல் அதிகாரம், அரச அதிகாரிகள், லங்கா நிலக்கரி நிறுவன அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைத்தல். இவ்வாறான முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்து, முறையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல். குறித்த விடயங்களுக்கு மேலதிகமாக, நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடர்பில் பதிவாகக்கூடிய ஏனைய முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் குறித்து அறிக்கையிடுதல் மற்றும் அத்தகைய நிலைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடுதல் ஆகியன இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.
இத்தகையை ஜனாதிபதி ஆணைக்குழுக்களால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதைக் கடந்த காலங்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. வெறும் கண்துடைப்புக்காகவும், வாக்களித்த மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கான கால அவகாசத்தையும் பெற்றுக்கொள்வதற்கான நாடகமாகவே இச்செயலைப் பார்க்க வேண்டிருக்கிறது. தம் அரசாங்கத்தில் இடம்பெற்ற நிலக்கரி ஊழலைத் தெட்டத் தெளிவாகத் தேசிய கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற போதிலும், அதனை மக்கள் மத்தியில் பொய்யெனப் பிரசாரம் செய்ய முனைவதென்பது எவ்வளவு கேவலமான செயலாகும் என்பதை யாவரும் புரிவர்.
ஆகையால், ஜனாதிபதி ஆணைக்குழு என்ற போர்வையில் தம் தவறுகளை மூடிமறைக்கும் கைங்கரியத்தைத் தற்போதைய ஆட்சியாளர்கள் விட்டுவிட்டு, மக்களுக்கான உண்மையான நிவாரணத்தையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுமாத்திரமன்றி, மக்கள் மீது திணிக்கப்படும் பாரிய வரிச்சுமையையும் தற்போதைய ஆட்சியாளர்கள் இல்லாதொழிக்க வேண்டும். அப்படிச் செய்வதனூடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான தீர்வு கிடைக்குமென்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நன்று புரிந்துகொள்ள வேண்டும்.