ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து பழிவாங்கும் காட்டாட்சி...

ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து பழிவாங்கும் காட்டாட்சி...

ஜனநாயக நாடொன்றின் ஊடக சுதந்திரம் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவது காலக்கொடுமையாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உள்வாங்கி வெற்றிகரமாக ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த நிலையில், இலங்கையில் அரசியல் அலையில் சிக்குண்டு ஆட்சிபீடமேறிய தற்போதைய தேசிய மக்கள் சக்தியால் அச்சுதந்திரம் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவது பெரும் சாபக்கேடே. ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தற்போதைய ஆட்சியார்களால் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. அதன் உச்சகட்டச் சம்பவம் அண்மையில் ஓர் ஊடகவியலாளருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையின் புகழ்பெற்ற பெண் ஊடகவியலாளர் சுலோசனா, தன்னுடைய சமூக ஊடகமொன்றில் தரவேற்றிய பதிவு தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறார். நேரடியாக அவர் விசாரணைக்கு இதுவரை அழைக்கப்படாத போதிலும், அவருடைய பதிவேற்றத்தைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள்.

சுலோசனாவின் எக்ஸ் தளக் கணக்குடன் தொடர்புடைய பதிவு ஒன்று இலங்கையின் சட்டங்களை மீறுவதாகக் கூறி, இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்டரீதியான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக எக்ஸ் நிறுவனம் சுலோசனாவுக்கு அறிவித்துள்ளது. எனினும், அந்த உள்ளடக்கத்துக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறித்த பதிவுடன் தொடர்புடைய சமூக ஊடகப் பதிவினை ஆராயும்போது, அதில் சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகின்றது. அந்தப் பதிவு, நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்த நியாயமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அறிக்கையிடலாகவே தென்படுகின்றது. அனைத்து ஊடகங்களாலும் கேள்விக்குட்படுத்தப்பட்ட விடயத்தையும், தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட தரவுகளையுமே அப்பதிவு எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதற்கான காரணம் தெளிவாக இல்லாதது, சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டைத் தடுக்க முயற்சிப்பதாகச் சந்தேகத்தை எழுப்புகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கும் ஜனநாயக ரீதியான பேச்சுச் சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தகவல்களைத் தேடுதல், பெறுதல் மற்றும் வெளியிடுதல் ஆகிய சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். தெளிவான சட்ட ரீதியான காரணங்களின்றி அந்த உரிமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் வன்மையாக நிராகரிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் கொடும் அடக்குமுறையான ஆட்சிக் காலத்தில்கூட இவ்வாறான ஊடக சுதந்திரங்கள் பறிக்கப்படவில்லை. கேள்விகேட்கும் உரிமை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தினால், பல ஊடகவியலாளர்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி பல ஊடக நிறுவனங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றன.

அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர் சுலோசனா மீது நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பாரிய ஊடக அச்சுறுத்தல் இதுவாகும். இதற்கு முன்னரும், ஈரான் கப்பலில் பயணித்த ஈரானிய கடற்படையினர் தாக்குதலுக்குள்ளானபோது, கராப்பிட்டிய வைத்தியசாலையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதும் இதேபோன்றதோர் அடக்குமுறையை தற்போதைய அரசாங்கம் நிகழ்த்தியிருந்தது, அனைத்து சிங்கள மக்கள் முன்னிலையிலும் சுலோசனாவின் அடையாள அட்டையைப் பறித்தெடுத்த புலனாய்வாளர்கள், அவர் தமிழர் என்பதை அடையாளப்படுத்தி கொச்சையாகப் பேசிய சம்பவமும் பதிவாகியிருந்தது. இது பாரியதோர் ஊடக அடக்குமுறையாகும். இந்நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள் பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்பதற்கு இச்சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

தற்போதைய ஆட்சியார்களின் மத்தியில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றிப் பணியாற்ற முடியாமலிருக்கின்றது. அடக்குமுறையின் உச்சத்தைத் தற்போதைய ஆட்சியாளர்கள் கையாள்கின்றனர். இதனால் தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றிச் சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயலைச் சர்வதேச ஊடக நிறுவனங்கள் தட்டிக்கேட்க முன்வரவேண்டும். அதுமாத்திரமன்றி, இலங்கையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்கள் அச்சமின்றித் தமது தொழிலைச் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், ஜனநாயக ரீதியான பேச்சுச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.