இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை (23) இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதுவர்களுக்கு இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிய உடன்படிக்கையின் பின்னணி: கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான 10 நாள் ஆரம்பக்கட்ட போர்நிறுத்தம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்தப் புதிய உடன்பாட்டின் மூலம் அது மேலும் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர்நிறுத்தமும் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாக வெளியாகும் ஊடகச் செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி மறுத்துள்ளார்.
தனது 'ட்ரூத்' (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இதற்காக என்னிடம் போதிய கால அவகாசம் உள்ளது, ஆனால் ஈரானிடம் அவ்வாறு இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.