வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் வகையில், இம்முறை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 84.6% என்ற பிரம்மாண்டமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1952ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு இதுவாகும். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டில் பதிவான 78.29% என்ற சாதனையை இம்முறை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழக்கத்திற்கு மாறாகச் சென்னை மாநகரிலும் இன்று மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34% என்ற அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், இளம் வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர்.
கோயம்புத்தூர் பகுதியில் வாக்காளர்களை வரவேற்பதற்காக “டீனா” (Teena) என்ற ரோபோ பயன்படுத்தப்பட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சென்னையில் புதுமணத் தம்பதி ஒன்று தங்களது திருமண உடைகளிலேயே வந்து வாக்களித்தமை ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
இம்முறை 234 தொகுதிகளுக்காக 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதில் திமுக (DMK) கூட்டணி, அதிமுக (ADMK) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் சீமானின் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத் தேர்தலின் அரசியல் பின்னணியும் முக்கியத்துவமும்
இந்தத் தேர்தலின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏப்ரல் 17ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் புதிய தொகுதி மறுவரையறை (Delimitation) முன்மொழிவு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டமூலம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இத்தேர்தல் நடைபெறுவதாகும்.
இந்தத் தோல்வியானது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மற்றும் தென்னிந்தியாவின் எதிர்ப்பு:
இந்திய அரசியலமைப்பின் 334-வது பிரிவின்படி, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2
011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறையும்.
இது வட இந்தியாவில் அதிக செல்வாக்குக் கொண்ட பாஜக-வுக்குச் சாதகமாக அமையும். இந்தத் திருத்தத்தின் மூலம் லோக்சபாவின் ஆசனங்களை 543-லிருந்து 850-ஆக உயர்த்த முன்மொழியப்பட்டது.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சரியாகப் பின்பற்றி வளர்ச்சியடைந்து வரும் தங்களுக்கு இது இழைக்கப்படும் அநீதி என்பதே கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிலைப்பாடாகும்.
பாஜக இந்த முன்மொழிவை மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைத்து லோக்சபாவில் முன்வைத்த போதிலும், அவர்களின் அந்தத் தந்திரம் தோல்வியடைந்தது.
தமிழகத் தேர்தல் களம் மற்றும் கூட்டணிகள்:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பாஜக, தென்னிந்தியாவில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட எடுக்கும் முயற்சியில் இத்தேர்தல் மிகவும் முக்கியமானது.
SPA கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி): மு.க. ஸ்டாலின் தலைமையிலான இக்கூட்டணியில் திமுக (DMK), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இக்கூட்டணிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்கின்றனர். கருத்துக்கணிப்புகளின்படி, இக்கூட்டணி 181-189 (40%) இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற வாய்ப்புள்ளது.
NDA கூட்டணி: அதிமுக (AIADMK) தலைமையிலான இக்கூட்டணியில் பாஜக-வும் ஒரு அங்கமாகும். இவர்கள் 38-42 (29%) இடங்களை வெல்லக்கூடும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றி கழகம் (TVK): இத்தேர்தலின் மிக முக்கியமான மற்றும் பிரபலமான போட்டியாளர் தளபதி விஜய் ஆவார். இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
அவர் 8-10 (23.9%) இடங்களைப் பெறுவார் எனக் கணிக்கப்பட்டாலும், அவர் பெறும் வாக்கு சதவீதம் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.
விஜய்யின் வாக்குறுதிகளும் தமிழக அரசியலும்:
தளபதி விஜய் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
அவற்றுள் சில:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான பல்கலைக்கழகம் அமைத்தல்.
ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பப் பெண்களுக்குத் திருமணத்தின் போது 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்குதல்.
குறைந்த வருமானம் கொண்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை வழங்குதல்.
எம்.ஜி. ராமச்சந்திரனில் (MGR) தொடங்கிய தமிழக சினிமா-அரசியல் கலாசாரம் இன்றும் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது.
இருப்பினும், தமிழகத்தின் தனிநபர் வருமானம் ($4323) இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட அதிகமாக உள்ளதுடன், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது.
மே 4-ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முடிவுகளும் அன்று வெளியாகவுள்ளதால், இது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாக அமையும்.