செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதாகக் கூறி, மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தமது ஊழியர் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் குறைத்து வருகின்றன.
மெட்டா (Meta):
மே 20 ஆம் திகதிக்குள் தனது ஊழியர்களில் சுமார் 10% பேரை (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்யவுள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.
மேலும், 6,000 வெற்றிடங்களை நிரப்பாமல் மூடவும் தீர்மானித்துள்ளது. AI தொழில்நுட்பத்திற்காக 115 பில்லியன் முதல் 135 பில்லியன் டொலர் வரை முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் (Microsoft):
தனது அமெரிக்க ஊழியர்களில் 7% பேருக்கு (சுமார் 8,000 பேர்) விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Retirement) வழங்க மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக நீண்டகாலமாக பணியாற்றும் மூத்த ஊழியர்களுக்கு இது வழங்கப்படவுள்ளது. அடுத்த நிதியாண்டில் AI உள்கட்டமைப்புக்காக 110-120 பில்லியன் டொலர் வரை செலவிட மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
தொழில்நுட்பத்தின் தாக்கம்:
மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதெல்லா கூறுகையில், நிறுவனத்தின் குறியீட்டு (Coding) வேலைகளில் 30% ஏற்கனவே AI மூலம் கையாளப்படுவதாகத் தெரிவித்தார்.
மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், அடுத்த ஆண்டில் மென்பொருள் உருவாக்கத்தில் (Development) பாதிக்கும் மேற்பட்டவை மனிதர்களுக்குப் பதிலாக AI மூலம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் AI பிரிவின் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் பெரும்பாலான வெள்ளை காலர் (White-collar) வேலைகளை AI மாற்றீடு செய்யும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களின் கவலை:
தொழில்நுட்ப நிறுவனங்கள் AI-க்காக பில்லியன் கணக்கில் செலவிடும் அதேவேளை, ஊழியர்கள் தமது வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களின் கணினி செயல்பாடுகளை (Mouse movements, Clicks) அவதானித்து, அந்தத் தரவுகளை AI மாதிரிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமேசான் (Amazon) மற்றும் ஆரக்கிள் (Oracle) போன்ற ஏனைய முன்னனி நிறுவனங்களும் இதேபோன்று ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.