முன்னணி போர்முனையில் தகுந்த உணவு மற்றும் நீர் இன்றி பல மாதங்களாக விடப்பட்டிருந்த மெலிந்த தேகத்தைக் கொண்ட படைவீரர்களின் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு உயர்மட்ட கட்டளை அதிகாரி ஒருவரைப் பணிநீக்கம் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட படைவீரர் ஒருவரின் மனைவியான அனஸ்தேசியா சில்ச்சுக் (Anastasiia Silchuk) சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் ஊடாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்தப் புகைப்படங்களில் இருந்த நான்கு வீரர்கள் கடும் மந்தபோஷணையினால் பாதிக்கப்பட்டு, விலா எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மெலிந்து காணப்பட்டனர்.
முன்னணி போர்முனைக்குச் சென்றபோது 80-90 கிலோ எடையுடன் இருந்த வீரர்கள், தற்போது சுமார் 50 கிலோவாகக் குறைந்துள்ளதாக சில்ச்சுக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை 17 நாட்கள் வரை அவர்கள் உணவின்றி இருந்துள்ளனர். தாகத்தைத் தணிக்க மழைநீரையும், பனியையும் உருக்கிப் பருக வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
உணவும் நீரும் இல்லை என்று வானொலி ஊடாக (Radio) அவர்கள் கதறியும், யாரும் செவிசாய்க்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குப்பியான்ஸ்க் (Kupiansk) நகருக்கு அருகில் உள்ள ஓஸ்கில் (Oskil) நதிக்கரையில் இந்த வீரர்கள் நிலைகொண்டிருந்தனர்.
அப்பகுதிக்குச் செல்லும் பாதைகளை ரஷ்யா அழித்துள்ளதால், ட்ரோன்கள் (Drones) மூலமாகவே விநியோகங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
எனினும், உணவு மற்றும் மருந்துகளைக் கொண்டு வரும் ட்ரோன்களை ரஷ்யப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பகிரங்கமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட கட்டளை அதிகாரி மாற்றப்பட்டுள்ளதுடன் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வீரர்களுக்குத் தேவையான உணவு விநியோகிக்கப்படுவதாகவும், நிலைமை சீராகி வருவதாகவும் அனஸ்தேசியா சில்ச்சுக் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நீண்டகால பட்டினியினால் வீரர்களின் இரைப்பைகள் சுருங்கியுள்ளதால், அவர்கள் தற்போது சிறுகச் சிறுகவே உணவு உட்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உக்ரைனிய இராணுவத் தலைமையகம் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சாதகமான சூழல் ஏற்பட்டவுடன் அந்த வீரர்களை அங்கிருந்து வௌியேற்றவும் (Evacuation) திட்டமிட்டுள்ளது.