தீபச்செல்வன் விவகாரமும் ஆக்கபூர்வமான எழுத்துச் சுதந்திரமும்!

தீபச்செல்வன் விவகாரமும் ஆக்கபூர்வமான எழுத்துச் சுதந்திரமும்!

உலகப் பிரசித்திபெற்ற எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka), படைப்பாளிகளிடம் அவர்களது ‘மிகவும் தீவிரமான வெறிகளை’ (Intense obsessions) சற்றும் குறைவின்றி பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறார். மற்றுமோர் எழுத்தாளரான டோனி மோரிசன் (Toni Morrison) “நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகங்களை நீங்களே எழுதுங்கள்” என்று பரிந்துரைக்கிறார். அதேவேளை, பார்பரா கிங்சோல்வர் (Barbara Kingsolver)இ வாசகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதுமாறு அறிவுறுத்துகிறார்.

‘படைப்பாற்றலுக்கு விதிகள் இல்லை’ என்று டோரிஸ் லெசிங் (Doris Lessing) குறிப்பிடுகிறார். எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway), விமர்சகர்களைப் புறக்கணித்துவிட்டு, தனது உள்மன அழுத்தங்கள் மற்றும் வேதனைகளிலிருந்து விடுபடுவதற்காகத் தனக்குத் தேவையான வழியில் எழுதுமாறு கூறுகிறார். வின்சென்ட் வான்கோ (Vincent van Gogh) சுய சந்தேகங்களைத் தாண்டி ஓவியம் வரைவதை (அல்லது எழுதுவதை) ஊக்குவிக்கிறார்.

ஆக்கபூர்வமான சுதந்திரம் என்பது ஆஸ்கார் வைல்ட் (Oscar Wilde) கூறியது போல, மனதை 'தவறாக நடக்க' (Misbehave) அனுமதிப்பதாகும். அதாவது, உலகம் எதிர்பார்க்கும் பொதுவான வழிகளுக்கு அப்பாற்பட்டு, வித்தியாசமான அல்லது 'தவறான' கோணத்தில் சிந்தித்து எழுதுவதை இது ஊக்குவிக்கிறது. இஸபெல் அலண்டே (Isabel Allende), 'மறக்கக் கூடாத விடயங்களைப் பதிவு செய்ய' எழுதுவதை வலியுறுத்துகிறார். தனது குடும்ப உறுப்பினரான சிலியின் சால்வடோர் அலண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் புரட்சிக்கு பிந்தைய காலத்தில் அனுபவித்த வேதனையான நினைவுகளையும், தனது சிறுவயது உலகம் இளமைப் பருவத்தில் எவ்வாறு மாறியது என்பதையுமே அவர் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதை நாம் அறிவோம்.

அதேவேளை, அண்டை நாட்டு எழுத்தாளரான அருந்ததி ராய் (Arundhati Roy), அரசு உள்ளிட்ட ஆதிக்க அதிகாரக் கட்டமைப்புகளுக்குச் சவால் விடுப்பதற்கு, கலை - இலக்கியம் மற்றும் கதை சொல்லலைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறார். அவரது புனைவு மற்றும் புனைவு அல்லாத படைப்புகள் அனைத்தும் இந்த நோக்கத்தையே கொண்டுள்ளன.

ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளராக, தீபச்செல்வனுக்கும் மேற்கூறிய உலகளாவிய எழுத்தாளர்கள் எதிர்பார்க்கும் அந்த 'எழுத்து சுதந்திரம்' கிடைக்க வேண்டும். அத்துடன், அவர்கள் எழுத்தின் ஊடாக எதைச் சாதிக்க முயன்றார்களோ, அதைச் செய்யும் உரிமை தீபச்செல்வனுக்கும் இருக்க வேண்டும். அருந்ததி ராயைப் போல அரசு மற்றும் ஆதிக்கக் கொள்கைகளுக்கு எதிராக எழுதவும், இஸபெல் அலண்டேயைப் போல வேதனையான நினைவுகளை மறக்காமல் இருக்கப் பதிவு செய்யவும், வான்கோவைப் போல சுய சந்தேகங்களிலிருந்து விடுபடவும் அவருக்கு உரிமை உண்டு.

அவரது முதல் நாவல் 'நடுகல்' ஆகும். அவர் அதில் என்ன எழுதியிருக்கிறார்...? பசியால் வாடிய குழந்தைகளுக்கு ரொட்டி சுட்டுக்கொண்டிருந்த பெண்கள் - குழந்தைகளுக்குப் பால் புகட்டிக்கொண்டிருந்த தாய்மார்கள் - அன்றாட உணவுக்காக வேலைக்குச் சென்ற ஆண்கள் - எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளப் பாடசாலைக்குச் சென்ற சிறுவர்கள் என, எந்நேரம் ஒரு குண்டு வீச்சுக்கோ அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கோ பலியாகிவிடுவோமோ என்ற அச்சத்துடன் இருண்ட கிளிநொச்சியில் கழித்த வாழ்க்கையைப் பற்றித்தான் அவர் எழுதியிருக்கிறார்.

"வன்முறையற்ற, போரற்ற ஒரு பூமியில் நாம் மனிதர்களாக வாழ வேண்டும். அங்கு மனிதர்களுக்கு ‘சுதந்திரமும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்’ என்ற எமது குழந்தைகளின் அப்பாவித்தனமான பிரார்த்தனையை இந்த நாவல் ஊடாகக் கலந்துரையாட நான் முயன்றேன். கடந்து சென்ற முப்பது ஆண்டுகாலப் போருக்குள் பிறந்து வளர்ந்த எனது அனுபவங்களையும் உணர்வுகளையும் ஒரு சாட்சியமாக இந்த நாவலை உங்கள் முன் வைக்கிறேன்" - தீபச்செல்வன்

ஒரு நாகரீகமடைந்த தேசமாக நாம் செய்ய வேண்டியது அவரையும் அவரது எழுத்துக்களையும் அன்புடன் - கண்ணீருடன் அரவணைப்பதா? அல்லது அவற்றை அழிப்பதா அல்லது தடை செய்வதா? ஆகக்குறைந்தது அவரது வலியைச் செவிமடுக்கக் கூட நம்மால் ஏன் முடியவில்லை...?

போருக்குப் பின்னரான இலங்கையில், யுத்தம் குறித்த தனது நேரடி அனுபவங்களை எழுதும் முதன்மையான எழுத்தாளர் தீபச்செல்வன் ஆவார். அதேவேளை, அவரது எழுத்துக்களின் இலக்கியத் தரம் மிகவும் உயர்வானது. எனவே, அடக்குமுறையாலோ அல்லது தணிக்கையாலோ இந்தப் பறவையை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய அனுமதிக்கக் கூடாது.

எழுத்தாளர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த இடமளிக்காத சமூகம் ஒரு காட்டுமிராண்டித்தனமான சமூகமாகும்; அது அநீதியானது. குறிப்பாக, அடக்குமுறை இயந்திரத்தின் மூலம் எழுத்தாளர்களைத் தணிக்கை செய்யும், அவர்கள் எழுதும் புத்தகங்களைக் கையகப்படுத்தும் ஒரு தேசம், படைப்பாளிகளுக்கு ஒரு ‘நரகம்’ என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கமைய, கடந்த சில வாரங்களாக இலங்கை அரசினால் தீபச்செல்வன் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள், அவருக்கு ஒரு ‘நரகத்திலிருக்கும் எழுத்தாளரின்’ அனுபவத்தையே வழங்கியுள்ளன.

இந்தியாவில் அச்சிடப்பட்டு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது நான்கு நூல்களின் 360 பிரதிகள் மார்ச் மாதம் 18ஆம் திகதி சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டன. இந்தத் தடுத்துவைப்பு குறித்து மார்ச் 27ஆம் திகதியே அவருக்குத் தெரியவந்தது.

அன்றிலிருந்து அவற்றை விடுவித்துக் கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடமும் நபர்களிடமும் அவர் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக, கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பத்தரமுல்ல செத்சிறிபாயவின் எட்டாவது மாடியில் உள்ள கலாசார அமைச்சுக்கு, ஏப்ரல் 17ஆம் திகதியன்று அவரை அழைத்திருந்தார்.

தனது புத்தகங்களை மீளப் பெற்றுச்செல்லும் தயார்நிலையுடன் அவர் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வந்திருந்தார். பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக அன்று முதல் இன்று வரை போராடிய ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தீபச்செல்வனின் வெளியீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்காக அன்று செத்சிறிபாயவின் 'எட்டாவது மாடியில்' ஒன்றுகூடியிருந்தனர்.

அந்தத் தருணத்தில், அமைச்சின் சார்பில் தேசிய கலைச் சபை மற்றும் இலக்கிய உப-குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன, கீர்த்தி வெலிசரகே, கமல் பெரேரா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். தீபச்செல்வனின் புத்தகங்களைத் தடுத்து வைத்தமை குறித்து அவர்கள் கூறிய சில விடயங்கள் மிகவும் அருவருக்கத்தக்கவை.

அங்கு கலந்துகொண்ட ஒருவர், "வேறோர் அரசாங்கம் இருந்திருந்தால், தீபச்செல்வன் இப்போது சிறையில் இருந்திருப்பார்" என்று கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தற்போதைய 'தேசிய மக்கள் சக்தி' அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர் கூறவேண்டிய மிகச் சிறந்த வார்த்தைகள் இவைதானா?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தைப் பொங்கல் தினத்தில் ஒரு தமிழ் தாயை அணைத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அதைத் தவிர, அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தாரா?

அடுத்து, ஏப்ரல் 20ஆம் திகதி இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தைக் கவனிப்போம். அதில் என்ன கூறப்பட்டுள்ளது?

தேசிய கலைச் சபை மற்றும் இலக்கிய உப-குழுவின் பரிந்துரைகளின்படி, உங்களது “பயங்கரவாதி” மற்றும் “சயனைட்” ஆகிய இரண்டு நூல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், “எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்” மற்றும் “இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்” ஆகிய நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவை தண்டனைச் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இங்கு எழும் பாரிய கேள்வி என்னவென்றால், வெறும் அரசியல் நியமனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய கலைச் சபைக்கோ அல்லது இலக்கிய உப-குழுவுக்கோ, தண்டனைச் சட்டக்கோவை போன்ற சிக்கலான சட்ட விடயங்களை விளக்குவதற்கான தகுதியோ அல்லது சட்ட அதிகாரமோ என்ன இருக்கிறது என்பதுதான். கலையை வளர்ப்பதாக உறுதியளித்த ஒரு குழுவினர், அடக்குமுறை இயந்திரத்தின் "கைக்கூலிகளாக" மாறி, ஓர் எழுத்தாளரின் வெளியீட்டு உரிமையைத் தணிக்கை செய்ய முன்வருவது மிகவும் ஒழுக்கமற்ற மற்றும் அருவருக்கத்தக்க செயலாகும்.

மேலும், தண்டனைச் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவு என்பது தண்டனைக்குரிய ஓர் "அரசுக்கு எதிரான" குற்றமாகும். ஒரு கவிஞர், நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளரான தீபச்செல்வன் மீது அரசாங்கம் சுமத்த முயலும் குற்றச்சாட்டுகளின் பாரதூரமான தன்மை இதுதான்.

குறைந்தபட்சம் அந்தக் குற்றச்சாட்டுகள் முறையாக முன்வைக்கப்பட வேண்டும். அதாவது, "இன்ன புத்தகத்தில், இன்ன பக்கத்தில், இன்ன பந்தியில் உள்ள வரிகள் 'அரசுக்கு எதிரான' கூற்றாகக் கருதப்படலாம்..." என்று விளக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. உண்மையில் அரசாங்கத்தின் இந்தச் செயலானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமைகள் இரண்டை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மீறுவதாக அமைந்துள்ளது.

முதலாவதாக, ஒரு பிரஜையாகத் தீபச்செல்வனுக்கு இருக்க வேண்டிய 'கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை' இது நேரடியாக மீறுகிறது. இரண்டாவதாக, அவர் 'பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது' என்ற உரிமையையும் இது மீறுகிறது (அதாவது, ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற ரீதியில், ஒரு சிங்கள எழுத்தாளருக்கு வழங்கப்படாத பாரபட்சமான நடத்தையை அவர் எதிர்கொள்கிறார்). எனவே, தீபச்செல்வனின் புத்தகங்களைக் கையகப்படுத்தி தடுத்து வைப்பதென்பது அநீதியானது மட்டுமல்ல, அது சட்டவிரோதமானதும் கூட.

அதுமட்டுமன்றி, ஓர் உலகப் பிரஜையாக/மனிதனாக அவருக்கு இருக்க வேண்டிய 'மனித உரிமைகளையும்' அரசாங்கம் மீறியுள்ளது. இதன் காரணமாகவே, கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று இது குறித்து முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்க அவர் நடவடிக்கை எடுத்தார்.

இருப்பினும், அரசாங்கம் தொடர்ந்தும் சமூக ஊடகங்கள் மற்றும் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி தீபச்செல்வனுக்கு 'பயங்கரவாதி', 'புலி' போன்ற முத்திரைகளை குத்தி அவதூறு பரப்பி வருகிறது. கலைச் சபையின் உறுப்பினர்களை அழைத்து வந்து, அவர் ஒரு 'தீவிரவாதி' என்று அரச ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் அவருக்கு ஆதரவாகக் கைகோர்த்த ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களையும் அவர்கள் இழிவுபடுத்தி வருகின்றனர்.

'தேசிய மக்கள் சக்தி' அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர முன்னின்று உழைத்த 'ஜன நியமு' (Jana Niyamu) கலைஞர்களைச் செத்சிறிபாயவின் எட்டாவது மாடிக்கு அழைத்து, அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறார்கள்...? தற்போதைய அரசாங்கம் இரகசியமாகக்கூட ஒரு தவற்றையும் செய்யாத மிகவும் தூய்மையான அரசாங்கம் என்றும், சுங்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும், இந்த அரசாங்கத்தைப் போல கலைஞர்களுக்குச் சுதந்திரம் வழங்கும் வேறு எந்த அரசாங்கமும் இல்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

அந்தக் கலைஞர்கள் இதற்கு முன்னர் 'கலைச் சுதந்திரம்' பற்றிப் பேசியவர்கள்; இப்போது அவர்கள் அரசாங்கத்தைச் சார்ந்து இருக்கும்போது, அடக்குமுறையையும் தணிக்கையையும் நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய அரசாங்கம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PSTA) வரைவு செய்துள்ளது. இது பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விடவும் மிகவும் கடுமையான, அடக்குமுறைச் சட்டமாகும். தங்களுக்கு இருக்கும் எல்லையற்ற நாடாளுமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் இதனைச் சட்டமாக்கினால், இந்த மண்ணில் சுதந்திரமாகப் படைப்புகளை உருவாக்குவதற்கு எமக்கு எவ்வித இடமும் இருக்காது.

நிச்சயமாகத் தீபச்செல்வன் மட்டுமல்ல, நாமும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால், அரசாங்கத்தின் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்; இல்லையெனில் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஏனெனில், அந்தச் சட்டமானது சுதந்திரமாக எழுதுவதை மட்டுமல்ல, சுதந்திரமாகச் சிந்திப்பதைக்கூடக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.

எனவே, இந்த அரசாங்கம் எவ்வளவுதான் அப்பாவியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அது ‘அடக்குமுறைக்கு’ மாத்திரமே தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.