இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வு மற்றும் விசாரணைகளுக்காக அரசாங்கத்திடம் இருந்து 210 இலட்சம் (21 மில்லியன்) ரூபா நிதி கிடைத்துள்ளது.
யாழ்ப்பாண நீதிவான் செல்நாயகம் லெனின்குமார் முன்னிலையில், 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின.
கடந்த ஆண்டு மேலதிக இரண்டு மாத அகழ்வாராய்ச்சிக்காக கோரப்பட்ட 19 மில்லியன் ரூபா நிதி நீதி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், நிலவிய கடும் மழை காரணமாகப் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் போனதுடன், 2025ஆம் ஆண்டு முடிவடைந்ததால் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்குத் திருப்பப்பட்டது.
இதனையடுத்து, 2026 பெப்ரவரி 09ஆம் திகதி யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த புதிய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நிதி தற்போது கிடைத்துள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலில் முதற்கட்ட அகழ்வு 2025 மே 15 அன்று ஆரம்பித்தது.
இரண்டாம் கட்ட அகழ்வு 2025 செப்டம்பர் 06 அன்று நிறைவடைந்தபோது, அங்கிருந்து 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்கள்:
மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, அங்கிருந்து பாலூட்டும் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இது அங்கிருந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைச் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கையில், இந்த மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுக் குழுவினருக்கு யாழ்ப்பாண நீதிவான் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இதற்கான அனுமதியைக் கோரியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக 28 சிறுவர்கள் உட்பட 376 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட மன்னார் 'சதொச' மனிதப் புதைகுழி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.