ஜொஹன்னஸ்பேர்க்கின் வசதி படைத்த புறநகர்ப் பகுதியில் உள்ள முகாபே குடும்ப இல்லத்தில் ஊழியர் ஒருவர் முதுகில் சுடப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரொபர்ட் முகாபேயின் இளைய மகனுக்கு அபராதம் விதித்து, அவரை நாடுகடத்துமாறு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 வயதான பெல்லர்மைன் சத்துங்கா முகாபே (Bellarmine Chatunga Mugabe) மற்றும் அவரது உறவினர் 33 வயதான டோபியாஸ் முகாபே மாட்டன்ஹோட்சே (Tobias Mugabe Matonhodze) ஆகியோர் கடந்த பெப்ரவரி 19 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மாட்டன்ஹோட்சே கொலை முயற்சி, துப்பாக்கிச் சட்டத்தை மீறியமை மற்றும் நீதியைத் தவறாக வழிநடத்தியமை (துப்பாக்கி கண்டெடுக்கப்படாததால்) ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு புதன்கிழமை மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முகாபே ஒரு பொம்மைத் துப்பாக்கியை (Toy Gun) உண்மையான ஆயுதம் போன்ற தோற்றத்தில் காட்டி அச்சுறுத்தியமைக்காக 400,000 ரான்ட் (£17,851) அபராதமும், குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக 200,000 ரான்ட் (£8,919) அபராதமும் விதிக்கப்பட்டார்.
அபராதத்தைச் செலுத்திய பிறகு, பொலிஸார் அவரை ஜொஹன்னஸ்பேர்க் சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஜிம்பாப்வேக்கு நாடுகடத்த வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட 23 வயதான சிப்போ மஹ்லங்கு (Sipho Mahlangu), முகாபே மற்றும் அவரது உறவினரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு வழக்கை மீளப்பெற விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மஹ்லங்குவிற்கு 250,000 ரான்ட் (£11,150) வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 150,000 ரான்ட் (£6,690) தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் புலனாய்வு அதிகாரி தெரிவித்தார்.
ஜிம்பாப்வேயை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆட்சி செய்த ரொபர்ட் முகாபே 2017 இல் ஒரு சதிப்புரட்சி மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது மகன்களான சத்துங்கா மற்றும் ரொபர்ட் ஜூனியர் ஆகியோர் தமது ஆடம்பரமான வாழ்க்கை முறையை இணையத்தில் பகிர்ந்து கொள்வதன் மூலம் அறியப்பட்டவர்கள். இதற்கு முன்னர், 2017 இல் அவர்களது தாயார் கிரேஸ் முகாபே, தென்னாப்பிரிக்க மொடல் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது இராஜதந்திர விலக்குரிமை (Diplomatic Immunity) மூலம் வழக்கை தவிர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
