செம்மணி மனிதப் புதைகுழி: 241ஆவது மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டது!  

செம்மணி மனிதப் புதைகுழி: 241ஆவது மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டது!  

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் நான்காம் நாளில், மற்றுமொரு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இதனுடன் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், 2026 ஏப்ரல் 30 அன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அன்று மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒரு சிறுவனுடையதாக (Adolescent) இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

"இன்று ஒரு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. இதன்படி 241 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 240 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. சட்ட வைத்திய அதிகாரியின் கருத்தின்படி, இன்று அகழ்வு செய்யப்பட்ட 232 ஆம் இலக்க எலும்புக்கூடு ஒரு சிறுவனுடையதாக இருக்கலாம்."

செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியின் மேலதிக அகழ்வுப் பணிகளுக்காக அரசாங்கத்திடம் இருந்து 210 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, ஏழு மாத இடைவெளியின் பின்னர் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் செல்வனாயகம் லெனின்குமார் முன்னிலையில் பணிகள் ஆரம்பமாகின. அகழ்வின் மூன்றாம் நாளான ஏப்ரல் 29 அன்று அகழ்வுப் பகுதியில் கறுப்பு நிற மண் பகுதிகள் கண்டறியப்பட்டன.

சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மேலும் கூறுகையில், அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட கறுப்பு நிற மண் பகுதிகளைப் பரிசோதித்த போது அதிலிருந்து ஒரு நாணயமும் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலில் இந்த அகழ்வுப் பணிகள் முதன்முதலில் 2025 மே 15 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

45 நாட்கள் நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06 அன்று நிறைவடைந்த போது, சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த எலும்புகள் அனைத்தும் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரையிலான ஆழத்திலேயே கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மேலும் குறிப்பிடுகையில்:

"அகழ்வுப் பகுதி 1 மற்றும் 2 என அடையாளம் காணப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது அகழ்வுப் பகுதியில் ஏற்கனவே 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முதலாவது பகுதியில் 231 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், 218 ஆம் இலக்க எலும்புக்கூடு இன்னும் தோண்டி எடுக்கப்படாமல் அங்கேயே பாதுகாக்கப்பட்டுள்ளது."

செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் மனித எலும்புகளுடன் கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகள் போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக 28 சிறுவர்கள் உட்பட 376 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோஸ் (Sathosa) புதைகுழி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.