வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் 'குறிப்பிடத்தக்க' (Substantial) நிலையிலிருந்து 'கடுமையான' (Severe) நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 6 மாதங்களுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் பின்னணி: கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலில் இரண்டு யூதர்கள் காயமடைந்ததுடன், சம்பவம் தொடர்பாக 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுவான 'ஹரகாத் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமியா' (Harakaat Ashab al-Yamin al-Islamiyya) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அச்சுறுத்தல் மட்டம் உயர்த்தப்பட்டதற்கான காரணங்கள்: எவ்வாறாயினும், அச்சுறுத்தல் மட்டத்தை உயர்த்துவது கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலின் விளைவாக மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
'பரந்த இஸ்லாமிய தீவிரவாதம்' மற்றும் 'தீவிர வலதுசாரி' (Far-right) அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடந்த தாக்குதல், பிரித்தானியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான சம்பவங்களின் சமீபத்திய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கடைசியாக பிரித்தானியாவில் அச்சுறுத்தல் மட்டம் 'கடுமையான' (Severe) நிலைக்கு 2022 பெப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.