மியான்மரின் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு (House Arrest) மாற்றப்படவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
இராணுவப் புரட்சி மூலம் அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
80 வயதான சூகி, 2021 பெப்ரவரி இராணுவப் புரட்சிக்கு பின்னர் மியான்மர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், "ஆங் சான் சூகியின் எஞ்சிய சிறைத்தண்டனை காலம் ஒரு குறிப்பிட்ட இல்லத்தில் கழிக்கப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது" என்று அரச ஊடகமான MRTV தெரிவித்துள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு சூகி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அரச ஊடகம் ஒளிபரப்பியது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்தச் செய்தியை வரவேற்றுள்ளார்.
"இது ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கை" என்று குறிப்பிட்ட அவர், வன்முறையை நிறுத்திவிட்டு உண்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே மியான்மரின் அரசியல் தீர்வுக்கு ஒரே வழி என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், அவரது மகன் கிம் ஆரிஸ் (Kim Aris) வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தாயார் எங்கிருக்கிறார் அல்லது அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து மியான்மர் அதிகாரிகள் இன்னும் தெளிவான தகவல்களை வழங்கவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.
"எனது தாயார் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து நான் இன்னும் கவலைப்படுகிறேன். அவர் உயிருடன் இருந்தால், அதற்கான ஆதாரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சூகிக்கு ஆரம்பத்தில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அத்தண்டனை பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டு தற்போது 27 ஆண்டுகளாக உள்ளது.
மியான்மர் புத்தாண்டு பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக இத்தண்டனை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
மியான்மரின் சுதந்திரப் போராட்ட வீரர் ஜெனரல் ஆங் சானின் மகளான சூகி, முந்தைய இராணுவ ஆட்சியின் போதும் சுமார் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.