ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் III ஆம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருடனான சந்திப்பைத் தொடர்ந்து, பிரித்தானிய விஸ்கி மீதான இறக்குமதி வரிகளை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்குமாறு மன்னர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மன்னர் மற்றும் ராணியின் கௌரவத்திற்காக, ஸ்கொட்லாந்து விஸ்கி மற்றும் அமெரிக்காவின் கென்டக்கி விஸ்கி ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தகத் தடைகளை நீக்கவுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக ட்ரம்ப்பின் உலகளாவிய வர்த்தகக் கொள்கையின் கீழ், பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வரி நீக்கமானது ஸ்கொட்ச் விஸ்கி (Scotch Whisky) ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஸ்கொட்லாந்து விஸ்கி உற்பத்தியாளர்கள் தமது விஸ்கியை முதிர்ச்சியடையச் செய்ய (Aging) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஓக் மரப் பீப்பாய்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளதுடன், இது அமெரிக்காவின் விருந்தோம்பல் துறைக்குக் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கனேடிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக வீழ்ச்சி காரணமாக கடந்த வருடம் அமெரிக்க விஸ்கி ஏற்றுமதி 19 சதவீதத்தால் சரிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.