இரண்டு தேர்தல்கள், ஓர் எச்சரிக்கை..!

இரண்டு தேர்தல்கள், ஓர் எச்சரிக்கை..!

2024 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP), மக்கள் அதிருப்தியின் வரலாற்று அலைகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்தது. பல தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஊழல், வாரிசு அரசியல் மற்றும் 2022ஆம் ஆண்டின் பேரழிவுகரமான பொருளாதார வீழ்ச்சியால் சோர்வடைந்திருந்த வாக்காளர்கள், நாட்டின் அரசியல் கலாசாரத்தில் ஒரு முறையியல் மாற்றத்தை வாக்குறுதி அளித்த ஒரு "வெளியார்" இயக்கத்தை நோக்கித் திரும்பினர்.

இலங்கையிலிருந்து வடமேற்கே ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பால், ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இதேபோன்றதொரு கதை அரங்கேறியது. 2015ஆம் ஆண்டில், இந்தியாவின் பாரிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து உருவான “ஆம் ஆத்மி கட்சி” (AAP) கட்சி, டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி பாரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அரசியல் கட்டமைப்பையே உலுக்கிய அந்த வெற்றி, மக்கள் ஜனநாயக அரசியலுக்கு ஒரு புதிய மாதிரியை வழங்கியது. ஆனால், பத்து ஆண்டுகளின் பின்னர், அதாவது 2025 பெப்ரவரியில், பாரதிய ஜனதா கட்சி (BJP) டெல்லியைக் கைப்பற்றியபோது, AAP கட்சியால் 22 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதன் உயர்மட்டத் தலைவர்கள் சிறையிலிடப்பட்டு, அக்கட்சியின் பிம்பம் சிதைந்து, நாடாளுமன்ற பலம் உள்நாட்டிலேயே உடைந்து போயுள்ளது.

AAP கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கும், NPPஇன் தற்போதைய பயணப் பாதைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் தற்செயலானவை அல்ல; அவை படிப்பினைகள் நிறைந்தவை. இலங்கையின் NPP அரசாங்கம் இன்னும் ஒரு முறையியல் மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்புபவர்களுக்கு, AAPஇன் கதை வெறும் வெளிநாட்டு எச்சரிக்கை மட்டுமல்ல. அது தற்போதைய சூழலை நோக்கும் ஒரு கண்ணாடி. கேள்வி என்னவென்றால், இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தக் கண்ணாடியை நேர்மையுடன் உற்றுநோக்குமா என்பதுதான்.

AAP மற்றும் NPP ஆகிய இரண்டுமே அரசியல் சட்டபூர்வத்தன்மை குறித்த ஆழமான நெருக்கடிகளிலிருந்து உருவானவை. அரச வளங்களைத் தனிப்பட்ட சொத்தாகக் கருதிச் செயற்பட்ட அரசியல் வாரிசுகள் மற்றும் ஊழல் வலைப்பின்னல்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை மூலதனமாகக் கொண்டு, 2011ஆம் ஆண்டின் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து AAP வளர்ந்தது. அதன் நிறுவனர் - முன்னாள் சிவில் அதிகாரியான - அரவிந்த் கெஜ்ரிவால், தூய்மையான, திறமையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்தார். "சாதாரண மனிதனுக்காக (Aam Aadmi) சாதாரண மனிதனால் நடத்தப்படும் ஆட்சி" என்பதே அவர்களின் எளிய முழக்கமாக இருந்தது.

ஜனதா விமுக்தி பெரமுனவை (JVP) மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP), ராஜபக்ஷ யுகத்தின் ஊழல்களாலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விகளாலோ கறைபடாத ஒரு "வெளியார்" (Outsider) சக்தியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் (AAP மற்றும் NPP), வாக்காளர் தளமானது கொள்கை ரீதியான இணக்கப்பாட்டால் அல்ல, மாறாக ஒரு மாற்றத்துக்கான தாகத்தினாலேயே வரையறுக்கப்பட்டது. வாக்காளர்கள் AAP அல்லது NPPக்கு வாக்களித்தது, அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்ததால் அல்ல; மாறாக அவர்கள் வேறு யாரையும் நம்பத் தயாராக இல்லாததாலேயே வாக்களித்தனர்.

இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. இத்தகைய மக்கள் ஆணை, நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உடையக்கூடியது மற்றும் அரசியல் நயவஞ்சகத்தினால் ஏற்படக்கூடிய அழிவுகளுக்கு ஆளாகக்கூடியது.

டெல்லியில் AAP ஆட்சிக்கு வந்த தருணத்திலிருந்து, மத்திய அரசாங்கத்தை ஆளும் BJP, AAPஐ சட்டவிரோதமாக்கவும் செயலிழக்கச் செய்யவும், இறுதியில் அழிக்கவும் இடைவிடாத ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

தெற்காசிய அரசியலை அவதானிக்கும் எவருக்கும் இந்த ஆயுதங்கள் பரிச்சயமானவை: மத்திய புலனாய்வு அமைப்புகளை ஆயுதமாக்குதல், ஊழல் குற்றச்சாட்டுகளை (உண்மையான, மிகைப்படுத்தப்பட்ட அல்லது புனையப்பட்டவை) பெரிதுபடுத்துதல் மற்றும் நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவையே அவை.

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட AAPஇன் உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்ய, அமலாக்கத் துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பணியகத்தை (CBI) பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்தியது. இதன் விளைவாக, AAP அரசாங்கம் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, எப்போதும் தனது தற்காப்புக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன் வரவுசெலவுத் திட்டங்கள் குறைக்கப்பட்டன; அதன் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டன; தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்படாத துணைநிலை ஆளுநரிடம் (Lieutenant Governor) அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பல அரசியல்வாதிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி (BJP) தஞ்சம் அளித்துள்ளதை “ஆம் ஆத்மி கட்சி” சரியாகவே சுட்டிக்காட்டியது. இருப்பினும், வாக்காளர்கள் - குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் - தர்க்கரீதியான தார்மீகக் கணக்கீடுகளை விட, கைவிலங்கிடப்பட்ட AAP தலைவர்களின் உடனடிப் பிம்பங்களுக்கே முக்கியத்துவம் அளித்தனர். அரசியலில், பெரும்பாலும் பிம்பங்களே உண்மையை விடக் கொடூரமாக அதிகாரத்தைச் செலுத்துகின்றன.

இன்று இலங்கையில், 2022 பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான பழைய அரசியல் சக்திகளிலிருந்து உருவான எதிர்க்கட்சிகள், NPP அரசாங்கத்துக்கு எதிராக ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. இது BJPஇன் தந்திரோபாயங்களை ஒத்திருக்கிறது.

NPPஐ திறமையற்ற, ஊழல் நிறைந்த மற்றும் நயவஞ்சகமான ஒரு குழுவாகக் காட்ட அவர்கள் முயல்கின்றனர். அரசாங்கத்தின் ஒவ்வொரு சிறிய நிர்வாகத் தவறும், தாமதமாகும் சீர்திருத்தங்களும், NPP அரசாங்கம் பழைய அரசாங்கங்களை விட வேறுபட்டதல்ல என்பதற்கான ஆதாரங்களாக முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், ஒரு கட்டமைப்பு ரீதியான வேறுபாடு இங்கு உள்ளது: இந்தியாவில், மத்திய அரசாங்கத்தை ஆளும் பலமான BJP, டெல்லி மாநில அரசாங்கத்தைத் தாக்கியது. ஆனால் இலங்கையில், NPP தேசிய ரீதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டை ஆளுகிறது. எதிர்க்கட்சிகளிடம் அரசாங்க அதிகாரங்கள் இல்லை. இருப்பினும், AAPஐ வீழ்த்திய அதே அரசியல் அலைகளிலிருந்து NPP பாதுகாப்பாக இருக்க இந்த கட்டமைப்பு பலம் மட்டும் போதாது.

இலங்கையில் NPP அரசாங்கமானது மிகவும் சவாலான ஒரு சூழலை எதிர்கொள்கிறது. அதிகாரங்கள் அமைச்சர்களின் ஒரு சிறிய குழுவுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. பழைய அரசியல் தலைமைகளுக்கு விசுவாசமான அரச அதிகாரிகளை சந்தேகத்துடன் பார்ப்பது, அனுபவம் குறைந்த ஆனால் கட்சிக்கு விசுவாசமான நபர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

2025 நவம்பர் மாதம் ஏற்பட்ட 'டித்வா' புயலின் போது, இந்த நிர்வாகத்தின் பலவீனம் அப்பட்டமாகத் தெரிந்தது. மலையகத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு உயிருக்கு ஆபத்தான எச்சரிக்கைகள் தமிழ் மொழியில் வழங்கப்படாமல், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டன. இது திட்டமிட்ட புறக்கணிப்பு அல்ல, மாறாக அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் மொழி கையாளுகையில் உள்ள குறைபாடாகும்.

NPP கூட்டணிக்குள் ஜே.வி.பி அல்லாத ஏனைய தரப்பினர் - அதாவது கொள்கை வகுப்புக்காக இணைந்த நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் - தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனர். ஓர் ஆதரவாளர் குறிப்பிட்டது போல, "தேசிய மக்கள் சக்தி எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதை ஜே.வி.பி சிதைத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது."

AAP மற்றும் NPP ஆகிய இரண்டுமே "தார்மீகப் பொறி" (Moralism Trap) ஒன்றில் சிக்கியுள்ளன. மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்களை தமது அரசியல் அடையாளமாகக் கொண்டதால், மிகச் சிறிய தவறும் பாரிய நயவஞ்சகமாக சித்தரிக்கப்படுகிறது.

தூய்மையான அரசியல் என்ற வாக்குறுதியே AAPஇன் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. NPPஇன் "புதிய அரசியல் கலாசாரம்" என்ற வாக்குறுதி மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சியினர் - அவர்கள் ஊழல் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் - NPPஇன் ஒவ்வொரு தவறையும் பூதாகரமாக்குகின்றனர். மக்கள் ஒப்பீட்டு ரீதியான தார்மீகத் தீர்ப்புகளை வழங்குவதில்லை; அவர்கள் முடிவுகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்ளும் போது NPP காட்டும் தற்காப்பு அணுகுமுறை மற்றும் பொலிஸ் விசாரணைகளைக் கோருதல் போன்றவை, ஆரம்பத்தில் AAPக்கு ஆதரவாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரை அக்கட்சியிலிருந்து அந்நியப்படுத்திய அகந்தையை நினைவூட்டுகிறது. மேலும், தமது இலக்குகளை அடைய 15-25 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள், பன்மைத்துவ அரசியலை எதிர்பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படிப்பிணைகளை இலங்கையின் தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் எடுத்தியம்புமா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், மக்களையும் அவர்களின் ஆணையையும், தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் கைகள் ஓங்கும் போது, அனைத்தையும் விட்டு ஓடத்தான் ஏற்படும். இதற்கு, இலங்கையின் அண்மைக்காலச் சம்பவங்களை உதாரணங்களாக இருக்கின்றன என்பதை, அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.