ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான முடிவு ஒரு தவறான தீர்மானம் என ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பான்மையான மக்கள் கருதுவது புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த யுத்தம் உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கும் காரணமாகியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட்-ஏபிசி-இப்சோஸ் (Washington Post-ABC-Ipsos) இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 61 சதவீத மக்கள் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் ஒரு தவறு என நம்புகின்றனர். 36 சதவீதத்தினர் மட்டுமே அது சரியான முடிவு எனக் கூறியுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பால் 44 சதவீதத்தினர் தமது வாகனப் பாவனையைக் குறைத்துள்ளதாகவும், 42 சதவீதத்தினர் வீட்டுச் செலவுகளைக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறைந்த வருமானம் பெறுவோரிடையே (வருடத்திற்கு $50,000 க்கும் குறைவானவர்கள்) இந்தப் பாதிப்பு 56-59 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தேவையற்ற வெளிநாட்டுப் போர்களில் நாட்டை ஈடுபடுத்தப்போவதில்லை என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் கால வாக்குறுதிக்கு இந்த யுத்தம் முரணானது என 46 சதவீதத்தினர் கருதுகின்றனர்.
அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்புகள் குறைவாக இருந்தபோதிலும், இந்த யுத்தம் 2006 இல் ஈராக் போர் மற்றும் 1970 களின் ஆரம்பத்தில் வியட்நாம் போர் கொண்டிருந்த அதே அளவிலான செல்வாக்கற்ற நிலையை (Unpopularity) தற்போது எட்டியுள்ளது.
இந்த யுத்தத்திற்கு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரிடையே (Republicans) இன்னும் பலமான ஆதரவு நிலவுகிறது. அக்கட்சியைச் சேர்ந்தவர்களில் சுமார் 80 சதவீதத்தினர் ஈரான் மீதான தாக்குதல் சரியானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.