கனடாவின் புதிய குடியுரிமைச் சட்ட மாற்றம்: அமெரிக்க விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவின் புதிய குடியுரிமைச் சட்ட மாற்றம்: அமெரிக்க விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அண்மைக்கால மாற்றத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கனடியக் கடவுச்சீட்டைப் பெறுவதற்காகத் தங்களது குடும்பப் பின்னணிகளை ஆராயத் தொடங்கியுள்ளனர்.

பரம்பரை ரீதியான குடியுரிமை விதியில் (Citizenship by descent) மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்படி, இப்போது ஒருவரின் பாட்டன் அல்லது பாட்டி கனடியராக இருந்தால், அவர்கள் கனடியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

சிகாகோவைச் சேர்ந்த ஈவ் கிரீன்ஃபீல்ட் (Eve Greenfield) போன்ற பல அமெரிக்கர்கள், டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் மற்றும் அவரது கொள்கைகள் மீதான அதிருப்தி காரணமாக கனடாவிற்கு இடம்பெயர விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

"கனடிய முன்னுரிமைகள் எனது கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றன. சமூகம் அதன் மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர் அமன்தீப் ஹேயர் (Amandeep Hayer) கூறுகையில், அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வரும் கடுமையான கருத்துக்கள் மற்றும் அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற சிறுபான்மையினர் கனடியக் குடியுரிமையை அதிகம் நாடுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் கல்விச் செலவு குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணியாகும்.

பெலிங்ஹாம் (Bellingham) பகுதியில் உள்ள குடிவரவு வழக்கறிஞரான நிக்கோலஸ் பேர்னிங் (Nicholas Berning), முன்னதாக ஆண்டுக்குச் சில விண்ணப்பங்களே வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு மூன்று ஆலோசனைகள் வரை வழங்குவதாகக் கூறுகிறார்.

அமெரிக்கா அரசியல் ரீதியாகப் பெரும் சிக்கலில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மக்கள் வெளியேற விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.