மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி ஒன்றின் ஊடாக, இலங்கை திறைசேரிக்கு இழப்பு ஏற்பட்டுள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் குறித்த விசாரணைகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியைப் பெற விசாரணையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, மின்னஞ்சல் ஊடுருவல் (Email Hacking) மற்றும் போலி மின்னஞ்சல்கள் மூலம் தகவல்களைத் திருடுதல் (Phishing) ஆகியவற்றைக் கண்டறிவதில் விசேட நிபுணத்துவம் கொண்ட அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் உதவியும் இந்த விசாரணைகளுக்காகப் பெறப்பட்டுள்ளது.
இந்த மோசடியான மின்னஞ்சல்கள் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டன, திருடப்பட்ட பணம் தற்போது எங்குள்ளது அல்லது இந்த கொள்ளைக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
அதேநேரம், மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவும் இது குறித்த தகவல்களைத் தேடி வருகின்றது.
தற்போது அவுஸ்திரேலிய அதிகாரிகளின் உதவியும் இதற்குப் கிடைத்து வருவதால், இது ஒரு சர்வதேச அளவிலான விசாரணையாக மாற்றமடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்த சைபர் தாக்குதல் குறித்து நிதி அமைச்சு அறிந்திருந்த போதிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது குறித்து உத்தியோகபூர்வமாக மார்ச் 28 ஆம் திகதியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சில ஆவணங்களையும் இந்த சைபர் குற்றவாளிகள் திருடியிருக்கலாம் அல்லது பிரதி எடுத்திருக்கலாம் எனத் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் எந்தவொரு பணப் பரிமாற்றத்திற்கும் முன்னர் மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய தரவுகளைக் கடுமையாகப் பரிசோதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஆவணங்கள் மாயம் என்ற செய்தியை அமைச்சு மறுப்பு
இதற்கிடையில், கடந்த வாரம் ஊடகமொன்றில் வெளியான, பிரான்ஸ் நாட்டுடனான கடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளன என்ற செய்தியை நிதி அமைச்சு மறுத்துள்ளது.
கடன் வழங்குநர்களுடன் முறையான தொடர்புகளைப் பேணி வருவதாகவும், கடன் தவணைகள் முறையாகச் செலுத்தப்படுவதாகவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தபோது, இந்த 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை மற்றும் மேலதிகமாக ஏதேனும் பணம் இழக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டது.
இந்த பாரிய சைபர் கொள்ளை குறித்து ஆராய்வதற்காகச் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.