தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் பணிகளில் தவெக இறங்கியுள்ளது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய 6 முக்கியமான பாயிண்டுகள் தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக அரசியலில் ஒரு மாபெரும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி, 108 இடங்களில் வென்று தமிழக வெற்றிக் கழகம் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
தி.மு.க கூட்டணி 70 இடங்களுக்கும், அ.தி.மு.க 51 இடங்களுக்கும் தள்ளப்பட்டுள்ள நிலையில், தவெகவினர் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.
அதேநேரம் இந்த வெற்றி என்பது ஏதோ ஒரு மேஜிக் அல்ல.. இது பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் அரசியல் திட்டம் என்றே சொல்லலாம்..
விஜய்யின் இந்த அரசியல் எழுச்சி என்பது இந்த ஒரு தேர்தல் மூலம் மட்டும் உருவானது அல்ல.. இது பல அடுக்குகளாக, பல கட்டங்களாகச் செதுக்கப்பட்டது.
இரசிகர் மன்றம் விஜய் முதலில் கையில் எடுத்தது தனது ரசிகர் பலத்தைத் தான். தமிழகம் முழுவதும் பரவியிருந்த இலட்சக்கணக்கான ரசிகர் மன்றங்களை வெறும் சினிமாவுக்காக மட்டும் பயன்படுத்தாமல், மக்கள் மன்றமாக மாற்றினார்.
இரத்த தான முகாம்கள், நிவாரணப் பணிகள், மாணவர்களுக்குக் கல்வி விருதுகள் எனத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நின்றனர். இது ஒவ்வொரு வீட்டுடனும் ஒரு நேரடித் தொடர்பை உருவாக்கினார்.
இரகசியமாக நடந்த ஒரு "டெஸ்ட் ரன்" 2021ம் ஆண்டு எவ்வித ஆரவாரமும் இன்றி ஒரு சோதனையை விஜய் நடத்தினார். கட்சி தொடங்கப்படாத நிலையிலும், இரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகக் களம் இறங்கினர்.
சுமார் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் வெற்றி பெற்றனர். பூத் மேனேஜ்மென்ட் முதல் வேட்பாளர் தேர்வு வரை தங்களது நெட்வொர்க் வலுவாக இருப்பதை இந்தத் தேர்தல் நிரூபித்தது.
பொறுப்புகளில் கவனம் 2026 தேர்தலுக்கு முன்னதாக, வெறும் உற்சாகத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவெக கவனம் செலுத்தியது.
கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நேர்காணல்கள், பின்னணிச் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டே பெரும்பாலான பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வார்டு பொறுப்பாளர்கள் முதல் பூத் ஏஜெண்டுகள் வரை அனைவரும் தங்கள் வேலையைத் தெரிந்து இருந்தனர்.
விசில் சத்தம் புதிய கட்சிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கலே தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான். ஆனால், தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்த சூழலில், அது மக்களிடையே எளிதில் சென்று சேர்ந்தது.
போஸ்டர்கள், பேனர்கள் என்பதோடு நின்றுவிடாமல் சோஷியல் மீடியாக்கள், வீடுகளின் வாசல் கோலங்கள் என எல்லா பக்கமும் விசில் சின்னம் சென்று சேர்ந்தது. தவெகவின் லோக்கல் யூனிட்டுகள் எந்தளவுக்குப் பலமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
டிஜிட்டல் பரப்புரை நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுக்கள் தேர்தல் நேரத்தில் நேரடிப் பரப்புரைப் பாதைகளாக மாற்றப்பட்டன. மேலும், தலைமைக்குத் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டது.
இது ஒரு வலுவான தகவல் தொடர்பு களமாக மாறியது. ஊழல் எதிர்ப்பு, இளைஞர் நலன் உள்ளிட்டவை டிஜிட்டல் பரப்புரைகள் மூலம் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட்டன.
வழக்கமான பிரச்சாரம் இல்லை பொதுவாக அரசியல் கட்சி என்றால் எல்லா தொகுதிகளிலும் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும். பூத் ஏஜெண்டுகள் முக்கியத்துவம் பெறுவார்கள். ஆனால், அதை எல்லாம் தவெக தகர்த்துள்ளது.
வெறுமன விஜய் என்ற ஒரு நபர் மூலமாகவே இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளைத் தாண்டி விஜய் இவ்வளவு பெரிய வெற்றியை அடைவது சாதாரண விஷயம் இல்லை.. இது தமிழக அரசியல் ஒரு மிக முக்கியமான மாற்றத்தை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது.
பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’
தமிழக அரசியலில் 2024 - 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தியின் எழுச்சியும், அதன் வெற்றியில் இன்ஸ்டாகிராம் ஆற்றிய பங்கும் அரசியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரிய அரசியல் கட்சிகள் மேடைப் பேச்சுகள், போஸ்டர் சண்டைகள், தெருமுனை கூட்டங்கள் என்ற பழைய பாணி பிரச்சார உத்திகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்த ஜென்ஸீ தலைமுறையை இன்ஸ்டாகிராம் வாயிலாகக் குறிவைத்து வென்றெடுத்துள்ளது தவெக.
தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சி முளைத்து, அது குறுகிய காலத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பெரும் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டுகொண்டிருந்த தமிழக அரசியல் களத்தில், தமிழக வெற்றிக் கழகம் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான வெர்ச்சுவல் ஆயுதம்தான் இன்ஸ்டாகிராம்.
ஜென்ஸீ என்று அழைக்கப்படும் இன்றைய இளைஞர்களின் உலகத்தை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, அவர்களை அதீத அரசியல் ஆர்வம் மிக்கவர்களாக்கியதில் தவெக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்றைய 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், அதாவது ஜென்ஸீ தலைமுறை, மற்ற தலைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை, தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதில்லை.
வாசிப்புப் பழக்கம் அறவே கிடையாது. இவர்களுக்கான உலகம் ஸ்மார்ட்போன்களுக்குள் மட்டுமே சுருங்கியுள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் என்பது இவர்களைப் பொறுத்தவரை தனி உலகம்.
இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எழுத்து வடிவிலான செய்திகளை விட காட்சி வாயிலான செய்திகளே அதிகம் பிடிக்கிறது. அதிலும் இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் கலாச்சாரம் தலையெடுத்தப் பிறகு இது வேறு ஒரு பரிணாமத்தை அடைந்தது.
ஒரு நிமிட ரீல்ஸ் மூலமாக உலக நடப்புகளைப் புரிந்துகொள்ள முற்படும் இந்தத் தலைமுறையிடம், நீண்ட மேடைப் பேச்சுகள் எடுபடாது என்பதை தவெக மிகச் சரியாகக் கணித்தது.
இன்ஸ்டாகிராம் வெறும் புகைப்படங்களைப் பகிரும் தளமாக இருந்த காலம் போய், இப்போது அது ஒரு கருத்துருவாக்க கருவியாகவே மாறிவிட்டது.
இன்ஃப்ளூயன்ஸர்கள் என்ற வார்த்தையே கூட இன்ஸ்டாகிராமின் வருகைக்குப் பிறகே பிரபலம் அடைந்தது. அதற்கு முன் வெறுமனே யூடியூபர்கள் என்று பொதுவான வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக வலைதளம் என்ற பதத்துக்கு அடையாளமாக விளங்கிய ஃபேஸ்புக் தற்போது ஜென்ஸீ கிட்ஸ்களை பொறுத்தவரை, வயதானவர்கள் பயன்படுத்தும் தளமாகவும், எக்ஸ் என்பது அரசியல் விவாதங்களின் தளமாகவும் மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம் மட்டுமே இளைஞர்களின் உணர்வுகளோடு இணைந்த தளமாக உள்ளது.
இங்குதான் தவெக-வின் ஐடி விங் மிக நுணுக்கமாக செயல்பட்டது. ஊர் முழுக்க ஒட்டப்படும் ஒரு சாதாரண அரசியல் போஸ்டரை விட, விஜய்யின் ஸ்டைலான புகைப்படங்கள், அவரது படங்களில் உள்ள குறியீடுகள் மற்றும் பின்னணி இசையுடன் கூடிய ஸ்லோ-மோஷன் ரீல்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தை ஆக்கிரமித்தன.
இதன்மூலம் அரசியல் என்றாலே என்னவென்று அறியாத, அல்லது அரசியல்படுத்தப்படாத ஒரு தலைமுறைக்கு அது ஒரு வைப் செய்யும் களமாக மாறியது.
தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 சீட் தேவை - விஜய்க்கு ஆதரவு அளிக்கப் போவது யார்?
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தவெக முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அதிமுகவின் ஆதரவைக் கோருவது. மற்றொன்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருவது.
அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தால் தவெக மிக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால், பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தச் சூழலில், தற்போது பழனிசாமி ஆதரவு அளிப்பாரா என்பது தெரியவில்லை.
மற்றொருபுறம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் விஜய் திட்டமிட்டு வருகிறார்.
இதற்கிடையே, தவெகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக விஜய்யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
காங்கிரஸ் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
பாமக தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வராததால், திருமாவளவன் தலைமையிலான விசிகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் விஜய் தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது.
தேர்தலுக்கு முன்பு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்று விஜய் கூறிவந்தார். அந்த எதிர்பார்ப்புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்கப்போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.