சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நேற்று (03) மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற "கம்பன் விழா"வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் முக்கிய இலக்கிய மற்றும் கலாச்சார விழாவான கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி பாரம்பரிய இந்து சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மனிதநேயத்தை முன்னிறுத்திய புதிய சமூகத்தை உருவாக்குவதில் இலக்கியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மகத்தான பொறுப்பு உள்ளது என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றும் தொண்டை மதிப்பிட்டு, கம்பன் புகழ் விருது வழங்கி கௌரவிப்பதும் இதன்போது நடைபெற்றது. ஜனாதிபதி ஒருவர் இந்த கம்பன் புகழ் விருதினால் கௌரவிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தமிழ்க் கவிஞரான கம்பனின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. இளைய தலைமுறையினரை கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றுடன் தார்மீக பாதையில் வழிநடத்துவதே இதன் நோக்கமாக இருப்பதுடன் கம்பன் கழகத்தினரால் ஆண்டுதோறும் கம்பன் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
இலங்கை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த புகழ்பெற்ற தனிநபர்களை இன, மத வேறுபாடின்றி கௌரவிக்கும் இந்த விழாவில், முன்னர் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பல சிறந்த தனிநபர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குருக்கள்மார்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், முன்னாள் மலேசிய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அரவணன், இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை, சர்வதேச புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிலா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி. சசிமகேந்திரன், கொழும்பு கம்பன் கழகத்தின் ஆலோசகர் மற்றும் முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார்.
குறிப்பாக இந்த கம்பன் விழாவிற்கு என்னை அழைத்தமைக்கும், உங்கள் அன்பையும் மரியாதையையும் எனக்கு வழங்கியதற்கும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த கம்பன் விழா இந்த ஆண்டு நான்கு நாட்களாக நடைபெறுகிறது. நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள துன்பியல் இலிருந்து மீண்டெழுவதற்கான போராட்டத்தில் இலக்கிய மற்றும் கலாச்சாரத் துறைக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
12ஆம் நூற்றாண்டில் கம்பர் கவிஞர் இராமாயணத்தை மறுஆக்கம் செய்து முன்வைத்தார். வால்மீகி இயற்றிய இராமாயணத்தின் மறுஆக்கம் அதில் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆண்டுதோறும் கம்பன் சங்கத்தினர் அவரது கவிதைகள் பற்றியும், இலக்கிய பணி பற்றியும், அதில் பொதிந்துள்ள சமூக நீதி பற்றியும், நல்ல வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து கலந்துரையாடுகின்றனர். நிதமும் அவற்றை உணர்ந்துகொள்கின்றனர்.
இன்று நாம் ஒரு சமூகமாக ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கிறோம். நம் கல்வி முறையும் சமூக அமைப்பும் நம் குழந்தைகளை முழுவதுமாக இயந்திரங்களாக மாற்றும் வடிவத்தை உருவாக்கியுள்ளன.
நல்ல கல்வி கொடுத்தால் குழந்தைகளின் வாழ்க்கை நிறைவடையும் என்று நாம் நினைக்கிறோம். அதற்காக பெற்றோர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அந்த உழைப்பு குழந்தைகளுக்கு அளித்திருக்கும் விதி என்ன? அதிகாலையில் விழிக்கும் குழந்தை, தூக்கக் கலக்கத்துடனே பாடசாலை செல்லும் குழந்தை, பாடசாலை முடிந்தும் மீண்டும் மேலதிக வகுப்பு செல்லும் குழந்தை, நள்ளிரவு வரை புத்தகம் பிடித்திருக்கும் குழந்தை — இன்று உருவாகியுள்ளது.
நாம் குழந்தைகளை ஒரு இயந்திரத்தின் ஆணி அல்லது பல்லிணை சக்கரமாக வளர்க்கிறோமா? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்று ஒரு இயந்திரத்தின் சிறு துண்டாகி விட்டனர். இயந்திர உதிரிப்பாகங்களாக மாறிய குழந்தைகளிடமிருந்து நாட்டிற்கு கிடைக்கும் எதிர்காலம் என்ன?
உள்ளத்தில் ஈரமற்ற குழந்தைகள், அன்பும் பாசமும் இல்லாத குழந்தைகள், பிறரின் வலியை உணரும் ஒத்துணர்வற்ற குழந்தைகள் உருவாகும் சமூகம் நமக்கு முன்பாக உருவாகியுள்ளது. அனைத்து நல்ல மனித உறவுகளும் பனிக்கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
இன்று சமூகத்தில் பெருமதியாக உள்ளது எது? பெரிய வாகனம், பெரிய வீடு, அதிக செல்வம் என்பவை சமூக மதிப்பாக மாறிவிட்டன. எனவே நம் சமூகத்திற்கு மீண்டும் மதிப்புகளும் பண்பாடும் தேவை.
உள்ளத்தில் கருணையுள்ள குழந்தைகள், பிறரிடம் இரக்கமும் அன்பும் பாசமும் கொண்ட குழந்தைகளை நம் சமூகத்தில் மீண்டும் உருவாக்க வேண்டும். அந்தக் கடமையில் இந்த கம்பன் விழா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று நாம் நம்புகிறோம்.
கடந்த சில நாட்களாக நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒன்றுகூடி இலக்கியத்திலும் கவிதையிலும் உள்ள ஆழத்தை, கம்பர் இராமாயணம் நமக்கு உணர்த்தும் அனுபவங்களை, நம் வாழ்க்கை முறையை ஒருவருக்கொருவர் புரியவைத்து ஆராய்ந்துள்ளீர்கள்.
நாம் அதிகமாக ஆராய்வதும் கற்பதும் தொழில்நுட்பத்தை நோக்கியே உள்ளது. கையில் தொலைபேசி வைத்திருக்கும் குழந்தைகள் அதன் ஒரு செயலியாகவே மாறிவிட்டனர். எனவே குழந்தைகளுக்கு விரிவான, பரந்த உலகை நாம் உருவாக்க வேண்டும். அந்த பரந்த உலகு என்பது இலக்கியம், கலை, கருணை, அன்பு ஆகியவற்றை முன்னிறுத்திய உலகை நம் குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும்.
நம் சமூகம் சிதைந்த சமூகமாக மாறியிருந்தது. ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் குரோதத்துடனும் பார்க்கும் சமூகம் நமக்கு முன்பாக இருந்தது. வடக்கில் தமிழ் மக்களை தெற்கில் சிங்கள மக்கள் சந்தேகத்துடன், வெறுப்புடன், கோபத்துடன் பார்க்கும் சமூகம் இருந்தது. வடக்கின் தமிழ் சமூகம் சிங்கள சமூகத்தை அதே விதமாக பார்க்கும் நிலை இருந்தது. இந்த வெறுப்பு
நிறைந்த சமூகம் எமக்கு எதைத் தந்தது? வடக்கிற்கும் தெற்கிற்கும் எந்த இடத்திற்கும் வெற்றி எதுவும் எஞ்சுவதில்லை. நமக்கு எஞ்சுவது அழிவு மட்டுமே, துன்பம் மட்டுமே.
போரில் முதலில் இறப்பது மனிதநேயம். இலக்கியத்தில் முதலில் எழுவதும் மனிதநேயமே. எனவே இலக்கியம் தேவை. மிகவும் வேதனையான, இன்னும் கண்டுகொள்ள முடியாத கடந்த காலம் நமக்கு உண்டு. ஒரு தேர்தலுக்காக நூலகம் எரிக்கப்படுவதை நான் இன்னும் சிந்திக்கிறேன்.
தேர்தலில் ஒரு தேர்தல் அலுவலகம் எரிக்கப்படுவதை நமக்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால் தேர்தலில் ஒரு நூலகம் ஏன் எரிக்கப்பட வேண்டும்? நம் வடக்கின் மக்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையே ஆழமான உறவு உண்டு.
படித்தல் ஒரு வாழ்க்கை முறையாக, படித்தல் ஒரு கலாச்சாரமாக மாற்றிக்கொண்ட மக்கள், நூலகத்திற்கு செருப்பு கழற்றி செல்லும் மக்கள், அவர்களை புண்படுத்த நல்ல சந்தர்ப்பம் நூலகத்தை எரிப்பதுதான். அத்தகைய மிகவும் கொடுமையான சோகங்களை நம் சமூகம் எதிர்கொண்டுள்ளது.
எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலாய் என நம்முடைய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு நமக்கு தேவை. சிக்கல்களை நாம் இன்னும் முழுமையாக தீர்த்துக்கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். சிக்கல்களை தீர்த்துக்கொள்ள இன்னும் நெடும் தூரம் செல்ல வேண்டும்.
ஆயினும் தேசிய ஒற்றுமைக்காக நாம் உறுதியான அடி எடுத்து வைத்துள்ளோம். எடுத்து வைத்த இந்த அடிகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். நம் நாட்டில் எந்த இனவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம்.
நம் தலைமுறை போரிட்டது, ஆனால் நம் குழந்தைகளுக்கு அந்த நிலையை நாம் உருவாக்கக்கூடாது. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு நமக்கு தேவை. இந்த பிளவுகளும் அந்நியப்படுத்தல்களும் நம்மை பல தசாப்தங்களாக பின்தள்ளுகின்றன.
பிரிவினையின் வரலாறு நீண்டது. எனவே ஒன்றிணைவதற்காக சில அடிகளை முன்னோக்கி எடுத்து வைக்க வேண்டும். முதலாவதாக பிறரின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு மரியாதை செய்வது அவசியம்.
சிங்கள மக்களுக்கு தனித்தன்மையான அடையாளமும் கலாச்சாரமும் உண்டு. தமிழ் மக்களுக்கு தமக்கே உரிய கலாச்சாரம் உண்டு. முஸ்லிம் மக்களுக்கும் தமக்கே உரிய கலாச்சாரம் உண்டு. ஒவ்வொரு கலாச்சாரமும் மரியாதையான அங்கீகாரம் பெறும் சமூகம் நமக்கு தேவை.
இந்த நேரத்தில் சம்பந்தன் எனக்கு நினைவு வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் என்னிடம் கூறினார். "அநுர, நான் இலங்கையர் என்று உலகிற்கு ஒலித்துக் கூறுவதற்கு விரும்புகிறேன். ஆனால் இரண்டாந்தர பிரஜையாக இலங்கையில் வாழ விரும்பவில்லை." எந்த ஒரு சமூகத்தினருக்கும் தாங்கள் இந்நாட்டில் இரண்டாந்தர பிரஜை என்று தோன்றுகிறது என்றால்,
அதை அளவிடுவது நான் அல்ல, அதை அளவிடுவது நீங்கள்தான். நான் உங்கள் நீதிபதி அல்ல. நீங்கள் இந்நாட்டில் அனைத்து உரிமைகளும் கொண்ட பிரஜைகள் என்று உங்களுக்கு நீங்களே நம்பிக்கை ஊட்டிக்கொள்ள வேண்டும்.
எனவே இந்நாட்டில் பிறந்து, பொருளாதாரத்திற்கு பங்களித்து, இந்த மண்ணில் மண்ணாக மாறும் அனைவரின் உள்ளத்திலும் "இது நம் தாய்மண்" என்ற உணர்வு உருவாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தேசிய ஒற்றுமையை நாம் உருவாக்க முடியாது. எனவே இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் இலக்கியம், கலை, விளையாட்டு, கல்வி மட்டுமன்றி அரசியலுக்கும் மிகப்பெரிய பங்குள்ளது. வரலாறு முழுவதும் நிலவியது பிளவுண்ட அரசியலே. உரிமைகளை உயர்த்திப் பிடித்து அந்த உரிமைகளுக்காக போரிட்ட அரசியல். பிறருக்கு எதிராக கருத்தியல்களைக் கிளறி விடும் அரசியல்.
நமக்கு தேவை பிளவுண்ட அரசியல் அல்ல. வடக்கு, கிழக்கு, மேற்கு என்ற வேறுபாடின்றி ஒன்றிணைந்த அரசியல். இந்த இனவாத கிருமி இருப்பது அரசியலுக்குள்ளேயே. இனவாதத்தை தோற்கடிக்க சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்கள் வகுத்தேனும் இனவாதத்தை தோற்கடிப்போம்.
இன்று நாம் நாட்டிற்குள் மிக முக்கியமான மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். அந்த மாற்றம் இந்நாட்டு மக்களுக்கு மாபெரும் வெற்றியை கொண்டுவரும். நமக்கு ஒரு கனவு உண்டு. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் இணைந்து வாழும் சமூகம். அதற்காக கலையிலும் இலக்கியத்திலும் மிகப்பெரிய மறுமலர்ச்சி தேவை.
கம்பர் இராமாயணத்தில் உள்ள நல்ல வாழ்க்கை முறையை நம் வாழ்வில் நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதன் சுவையை நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வோம். வெறும் இயந்திர உயிரியிலிருந்து மனிதனாக நாம் மாற வேண்டும். நாம் மூச்சு விட்டாலும், பேசினாலும் மனிதநேயம் கரைந்துவிட்டது. எனவே மீண்டும் மனிதநேயத்தை முன்னிறுத்திய புதிய சமூகத்தை உருவாக்குவதில் இலக்கிய விழாக்களுக்கு மிக முக்கியமான வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக கம்பன் கழகத்தின் அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நமக்கு வலிமையான தமிழ் இலங்கை இலக்கியம் தேவை. அதேபோல் வலிமையான கவிஞர்களும் திரைப்படக்கலைஞர்களும் தேவை. இலங்கையின் தமிழ் கலையிலும் கலாச்சாரத்திலும் மாபெரும் மறுமலர்ச்சி தேவை. அதற்காக எந்த ஒரு அமைப்பும் சங்கமும் இருக்கின்றது என்றால் நம் அரசாங்கமாக அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம்.