உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 6% உயர்வு!  

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 6% உயர்வு!  

கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தின் கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, உலகச் சந்தையில் எண்ணெய் விலை சுமார் 6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பதிவான மிக மோசமான மோதல் நிலை இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 6.79 அமெரிக்க டொலர்களால் (6.3%) அதிகரித்து 114.96 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 4.23 அமெரிக்க டொலர்களால் (4.2%) அதிகரித்து 106.17 டொலர்களாக உயர்ந்துள்ளது.

டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) "Project Freedom" நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் "உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Fox News தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க கடற்படைச் சொத்துக்களுக்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலுக்கும் மிக மோசமான அழிவுகரமான பதிலடி கொடுக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் முன்னரை விட இப்போது இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் டிரம்ப் அந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

Truth Social தளத்தில் டிரம்ப் வெளியிட்ட தகவல்

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்க இராணுவம் ஈரானின் ஏழு படகுகளைச் சுட்டு அழித்ததாக ஜனாதிபதி தனது Truth Social இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது தனது முன்னால் இரண்டு தெரிவுகள் இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்:

நல்லெண்ணத்தின் அடிப்படையில் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளுதல்.

மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தல்.

ஹோர்முஸ் நீரிணையில் இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரைத் தொடர்ந்து, தற்போது போர்நிறுத்தம் பெரும் சவாலுக்கு உள்ளாகியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.