தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பதை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி, அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தலைமை நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
சட்டமா அதிபர் தரப்பு: சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்தார். 2024 நவம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற்ற போதிலும், இந்த மனு 2025 அக்டோபரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இது காலதாமதமான ஒரு மனு என அவர் சுட்டிக்காட்டினார்.
மனுவில் உள்ள குறைபாடு: மனுதாரர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரை இந்த மனுவில் ஒரு பிரதிவாதியாக பெயரிடாமை ஒரு பெரிய குறைபாடு என அவர் வாதிட்டார்.
தற்போதைய நிலை: மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைய, அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பதை உறுதிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதால், இந்த மனு அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பு வாதம்:
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பொதுத்தேர்தலில் தமது கட்சிக்காரர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், அவர்கள் அந்தப் கட்சியின் உறுப்பினர்களாகவே நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதாகக் கூறினார். எனினும், தேர்தல் ஆணைக்குழு தற்போது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதால், இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு அவர் கோரினார்.
நீதிமன்றத்தின் கேள்வி மற்றும் தீர்ப்பு:
இதன்போது தலைமை நீதியரசர், "வாக்காளர்கள் ஒரு கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர், அவ்வாறிருக்கையில் இந்த மனுதாரர்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் ஒரு தனிப்பட்சியை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்?" என வினவினார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், கூட்டணிக்கு வாக்களித்தாலும் விருப்பு வாக்குகள் மூலம் தமக்குத் தேவையான உறுப்பினரைத் தெரிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அழைப்பாணைகளை (Notice) பிறப்பிக்காமலேயே தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.