அன்புமணி ராமதாஸுக்கு டெல்லி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ஒரு ஆஃபர், தவெக தலைவர் விஜய்யின் முதல்வர் கனவுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைத் திரட்ட விஜய் போராடி வரும் சூழலில், பாமகவின் இந்த திடீர் ரூட் மாற்றம் தமிழக அரசியலில் ஒருவித திகிலை உருவாக்கியிருக்கிறது.
பாமக தரப்பு ஒருவேளை பின்வாங்கினால், அதிமுகவின் தயவை நாட வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்படுவார் என்றே தெரிகிறது. அப்படியானால் இனி என்ன நடக்கும்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்காலத்திலும் இல்லாத வகையில் ஒரு அரசியல் இழுபறியைத் தோற்றுவித்துள்ளன.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் இப்போது ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், இந்த இடைவெளியில் மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றன. அந்த புள்ளிதான் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக கூட்டணியில் இருந்து 5 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள பாமக, இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது.
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், அன்புமணி ராமதாஸ் முன்வைப்பதாகச் சொல்லப்படும் கோரிக்கைகள் விஜய்யை நிஜமாகவே நிலைதடுமாற வைத்துள்ளதாம். சவுமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கேட்டுள்ளாராம்.
இது அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் டெல்லியின் நகர்வுகள் தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய இடத்தைக் கொடுக்க பாஜக மேலிடம் தயாராகி வருவதாக தெரிகிறது. இது நடந்தால், அன்புமணி தமிழகத்தில் விஜய்யின் கரத்தைப் பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மாநில அளவில் ஒரு துணை முதல்வர் பதவியை விட, மத்தியில் ஒரு அதிகாரமிக்க அமைச்சர் பதவி என்பது பாமகவின் வளர்ச்சிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்றே அன்புமணி நினைக்கக்கூடும்.
இதுமட்டுமன்றி, அதிமுக - பாஜக - பாமக என்ற பழைய ஃபார்முலா மறுபடியும் பலமானால், அது விஜய்க்கு பெரிய பின்னடைவாகவே அமையும்.
அன்புமணியை பொறுத்தவரை, இப்போதுள்ள சூழலில் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திப்பது என்பது தற்கொலைக்குச் சமம். கண்டிப்பாக அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் பாஜக கொடுக்கும் இந்த ஆஃபர் அவருக்கு ஒரு பாதுகாப்பான பாதையை உருவாக்கி தரலாம்.
ஒருவேளை அன்புமணி இதற்கு கைவிரித்துவிட்டால், விஜய்க்கு முன்னால் இருக்கும் ஒரே ஒப்ஷன் அதிமு வின் தயவை நாடுவதுதான். ஆனால், தேர்தல் களத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த விஜய், இப்போது அதிகாரத்திற்காக எடப்பாடி பழனிசாமியிடம் கையேந்துவாரா என்பது மிகப்பெரிய சந்தேகம்.
இந்த சிக்கல் ஒருபுறமிருக்க, மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனால் ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல் வரக்கூடும். அந்த சூழலைச் சமாளிக்கும் பலம் இப்போது தவெ-விடம் இருக்கிறதா? என்பதும் சந்தேகம்தான். இப்போதைக்கு தவெக முகாமில் வெறும் அமைதியே நிலவுகிறது.
அன்புமணிக்கு உண்மையிலேயே டெல்லி ஆஃபர் போயிருக்கிறதா அல்லது இது விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதற்காகக் கிளப்பி விடப்பட்ட தகவலா என்பது அடுத்த தினங்களில் தெரிந்துவிடும். ஆனால், தற்போதைய சூழலில் விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் விளையாட்டில் சிக்கியிருக்கிறார்.
ஏனென்றால், பாமக-வை இழுக்க அவர் போடும் கணக்குகளை விட, டெல்லி போடும் கணக்குகள் மிக வலிமையாக இருக்கின்றன.
அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது விஜய்யின் வேகத்தைத் தடுக்க பாஜக கையில் எடுத்திருக்கும் ஒரு தந்திரமாகவே பார்க்க முடிகிறது. அன்புமணி மாநில அரசியலை விட டெல்லி அதிகாரத்தையே இப்போது பாதுகாப்பானதாகக் கருத வாய்ப்புகள் அதிகம்.
விஜய்யின் "மாற்று அரசியல்" முழக்கம் இப்போது ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது. அதிமுகவின் ஆதரவைப் பெற்றால், அந்த மாற்று அரசியல் என்ற பிம்பம் மளமளவென உடைந்து விழும். ஒருவேளை அதிமுகவின் ஆதரவை பெறாவிட்டால் ஆட்சி அமைக்க முடியாது.
எனவே இந்த 14 நாட்களுக்குள் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும். அதுவரை விஜய்யின் முதல்வர் கனவு என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான். அன்புமணி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவுதான் தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளை தீர்மானிக்கப்போகிறது. என்ன தான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் என்ன செய்வார்?
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, எந்த கட்சியும் 118 தொகுதிகளை பெற்றிருக்காத நிலையில், ஜனநாயக முறைப்படி அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 163 மற்றும் 164-ன்படி தமிழக ஆளுநர் 4 வழிமுறைகளைக் கையாண்டு அரசியல் கட்சிகளை ஆட்சியமைக்க சட்ட ரீதியாக அழைப்பு விடுக்கலாம்.
அதன்படி தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் அந்த கூட்டணியை அழைக்கலாம். அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி போதிய ஆதரவுடன் இருந்தால் அக்கட்சியை அழைக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இருந்தால் அழைக்கப்படலாம்.
பெரும்பான்மை அவசியம்
வெளியிலிருந்து பெறப்படும் ஆதரவுடன் பெரும்பான்மையற்ற மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் கட்சியை அழைக்கலாம். இந்த வழிமுறைகளின்படி ஆட்சியமைக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வானவர் முதல்வராக நியமிக்கப்படலாம்.
அதன்பிறகு அந்த கட்சியின் முதல்வர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174-ன்படி எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 1994-ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த கட்சி சார்பில் சட்டப்பேரவையைக் கூட்டுவார். சட்டப்பேரவையில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
அந்த கட்சி தனிப்பெரும்பான்மைக்கான பலத்தை, அதாவது 118 உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டால் அந்த ஆட்சி எந்தவொரு பிரச்சினையும் இன்றி தொடரும்.
ஒருவேளை அந்தக் கட்சியால் பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சி ஆட்சியமைக்கும் வகையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார்.
அதன்படி அந்தக் கட்சி தங்களது பலத்தை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டால் அந்த கட்சி ஆட்சியமைக்கும். இரண்டாவதாக அழைக்கப்பட்ட கட்சியும் ஆட்சியமைக்க முடியாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 356-ன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்படும். அதன்பிறகு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்தப்படும்.
7 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக ஜெயிக்கவில்லை!
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தாலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியாமல் போயிருக்கிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, அரியலூர் உள்பட 7 மாவட்டங்களில் அக்கட்சியின் 'விசில்' சின்னம் எடுபடவில்லை. அந்த மாவட்டங்களையும், தொகுதிகளின் விவரங்களையும் பார்ப்போம்.
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உள்ளன. அதில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறவில்லை. அங்கு அதிமுக இரண்டு தொகுதிளிலும் வென்றுள்ளது. அடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளன.
அதிமுக கூட்டணி ஒரு இடங்களில் வென்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளில் திமுக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக கூட்டணியில் ஒரு பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளில் ஒரு தொகுதிகளில் கூட தவெக வெல்லவில்லை.. அங்கு இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியும் ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி வென்றுளளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கில் திமுக வென்றுள்ளது. ஒன்று அதிமுக வென்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வென்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 3ல் திமுக கூட்டணியும், நான்கில் அதிமுக கூட்டணியும் வென்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் காவிரி டெல்டா மாவட்டங்களான அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும், தெற்கே கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் சுத்தமாக தவெக வெற்றி பெறவில்லை.
வட மாவட்டத்தை எடுத்தால் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெறவில்லை. எனினும் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றுள்ளதால் கூட்டணி வைத்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
இதில அதிமுக அமமுக கூட்டணி அமைத்து டெல்டாவில் வலுவான செல்வாக்கை அதிமுகவிற்கு தந்துள்ளது. அதேபோல் பாமக உடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்தித்ததால் வடமாவட்டங்களில் ஓரளவு அதிமுக தப்பி உள்ளது.
அதேபோல் இடதுசாரிகள், விசிக ஆகியவற்றின் பலம் காரணமாக வடமாவட்டங்களில் ஓரளவு இடங்களை திமுக வெல்ல முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக சுனாமி போல் வாக்குகளை வாங்கியிருக்கிறது. தவெக மோசமாக எந்த தொகுதியிலும் தோற்கவில்லை.. எந்த தொகுதியிலும் டெபாசிட்டை பறிகொடுக்கவில்லை.