அநுர அரசின் நிதி மேலாண்மைக் குளறுபடிகள்...

அநுர அரசின் நிதி மேலாண்மைக் குளறுபடிகள்...

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலைப் பார்க்கின்றபோது, அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் நிதி மேலாண்மை தொடர்பான கேள்விகள் மிக முக்கியமான விவாதமாக உருவெடுத்துள்ளன.

அரசாங்கத்தின் பொறுப்பு என்பது மக்களின் வரிப்பணத்தைப் பொறுப்புடனும் வெளிப்படையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவது ஆகும். ஆனால் அண்மைக்காலங்களில் வெளிவரும் தகவல்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள், இந்த அடிப்படை நம்பிக்கையைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன.

தற்போதைய ஆட்சியாளர்களின் முறையான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இல்லாத நிலையில் பெரிய அளவிலான நிதிகள் தவறான வழிகளில் செல்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்களில் தெளிவின்மை நிலவுகிறது.

சில சந்தர்ப்பங்களில், சில நாடுகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிதிகள் தொடர்பில் பலமுறை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் உரிய இடங்களை அடையவில்லை என்ற தகவல்கள் வெளியாகின்றன. இது நிர்வாகத் தவறா, அல்லது திட்டமிட்ட மோசடியா என்ற கேள்வி எழுகிறது. அது தொடர்பான விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு வழங்கவேண்டிய கடன் தொகையின் ஒரு பகுதியான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொலைத்திருக்கிறது தற்போதைய அரசு. இக்கொள்ளை நடைபெற்றுப் பல மாதங்கள் கடந்த பின்னர்தான் வெளியுலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும், இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்குப் பகிரதப் பிரயத்தனத்தைத் தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதேபோல், சில முக்கிய நிதிப் பரிமாற்றங்களுக்கு உட்பட்ட ஆவணங்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுவது மேலும் கவலைக்கிடமானது. பிரான்ஸ் நாட்டுக்கு வழங்கவேண்டிய கடன் தொடர்பான ஆவணங்களைத் தொலைத்திருக்கிறார்கள் என்றால், இலங்கையின் நிர்வாகத் திறமையின் சீத்துவத்தை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதைக் கணக்கிடக்கூடியதாக இருக்கும்.

ஒரு நாட்டின் நிதி நிர்வாகத்தில் ஆவணங்கள் என்பது வெறும் காகிதங்களல்ல. அவை பொறுப்புணர்வின் சான்றுகள். அவை இல்லாமல் போவது நிர்வாக அமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது.

மேலும், அரச வங்கிகள் மூலமாக நடைபெற்றதாகக் கூறப்படும் இருமுறை கொடுப்பனவுகள் போன்ற குற்றச்சாட்டுகள், நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. ஓர் ஒழுங்கான கண்காணிப்பு அமைப்பு இருந்தால், இத்தகைய தவறுகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீதி அதிகார சபைக்கு அரச வங்கியொன்றினால் இருமுறை கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது. அத்தவறைக் கண்டறிந்த வங்கி நிர்வாகம், நிதியைத் திருப்பிக் கேட்டபோதிலும், இதுவரை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது பாரியதொரு நி;ர்வாகச் சீர்கேடாகும்.

அதுமாத்திரமன்றி, அமெரிக்க தபால் திணைக்களத்துக்கு இலங்கைத் தபால் திணைக்களத்தால் வழங்கப்பட்ட 625 இலட்சம் அமெரிக்க டொலர்களும் மாயமாகியிருக்கிறது.

இலத்திரனியல் கொடுப்பனவுகளில் கையாளவேண்டிய உரிய நடைமுறைகளைக் கையாளத் தவறியமையாலேயே இத்தகைய நிதியிழப்புகளைத் தற்போதைய அரசாங்கம் சந்தித்து வருகிறது. ஆட்சியாளர்களின் தரங்கெட்ட நிதி முகாமைத்துவம் மற்றும் பட்டறிவு இன்மையாலேயே இவை அரங்கேறுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் மிக அவசியமானது வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் ஆகும். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, அவற்றை அரசியல் விமர்சனமாக மட்டும் பார்க்காமல், சுயாதீன விசாரணைகளின் மூலம் உண்மையைக் கண்டறிவது அவசியம். மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் நிரபராதிகளின் நற்பெயரைக் காக்கும் பொறுப்பும் முக்கியம்.

நாடு ஏற்கனவே பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், நிதி முறைகேடுகள் பற்றிய எந்தவொரு சந்தேகமும் கூட மக்கள் நம்பிக்கையைப் பாதிக்கும். இந்த நம்பிக்கையே ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்.

அதனால், அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுத்து, கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். நல்லாட்சியும் பொறுப்புமிக்க நிதி மேலாண்மையும் இல்லாமல் எந்த நாடும் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியாது.

இன்று எழும் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அளிக்கப்படுவது நாளைய நம்பிக்கையை கட்டியெழுப்பும் என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதைவிடுத்து, வீரவசனம் பேசுவதும் தங்களைச் சுத்தவாளிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதும் நிரந்தரத் தீர்வாக அமையாது. நிதி முறைகேடுகளுக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற முடியாதெனப் பிரதியமைச்சர் கூறியிருப்பத வேடிக்கைக்குரிய விடயம்.

அநுரகுமார திஸாநாயக்க என்பவர் இலங்கை நாட்டிக் ஜனாதிபதி மாத்திரமன்றி, நிதியமைச்சரும்கூட. அதுமாத்திரமன்றி, மக்கள் நம்பிக்கையை வென்ற சர்வ பலம்பொருந்திய இலங்கையின் முதற்குடிமகன். அப்படியிருக்கும்போது, கழுவுகின்ற மீனில் நழுவும் மீனாக இருந்துவிடமுடியாது.

எனவே, நாட்டின் மீறு அக்கறையுள்ள தலைமுறைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக தற்போதைய ஆட்சியாளர்கள் செயலாற்ற வேண்டும். தம்மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது மாத்திரமன்றி, முறைகேடற்ற ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பும் தங்களுக்கு இருக்கின்றதென்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் புரியவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.