2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்துள்ளது.
மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு எதிராக, தங்களை விடுதலை செய்யக் கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து, நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
மேல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்த ஏனைய இரு பிரதிவாதிகளை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மூவர் 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த மேன்முறையீட்டு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு பிரதிவாதி சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.
2015 மே 13ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயதுடைய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வழக்குத் தொடரப்பட்டது. 2017ஆம் ஆண்டு இந்த வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.