யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அத்துமீறி அபகரித்து, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரை ரத்து செய்யப்படாமை காரணமாக, அப்பகுதி பூர்வீகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலநிலை குறித்து தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது குறித்துத் தெரிவிக்கையில்:
"2013ஆம் ஆண்டு சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரசாங்கக் காணிகளாகச் சுவீகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. பின்னர் 2015 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கக் காலத்தில், அந்த வர்த்தமானி நடைமுறையில் இருக்கும்போதே, சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையைக் கழிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அந்த வர்த்தமானி இதுவரை ரத்து செய்யப்படாததால், மக்கள் தமது நிலங்களுக்குரிய சட்டப்பூர்வமான உரிமையை உறுதிப்படுத்த முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, அந்த வர்த்தமானியை ரத்து செய்து, விடுவிக்கப்பட்ட நிலங்களுக்கு சட்டப்பூர்வ உரிமையை வழங்குமாறும், எஞ்சியுள்ள 3000 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறும் மக்கள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்."
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில், வட மாகாண இராணுவக் கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக மயிலிட்டி மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"36 வருடங்களாகியும் விடுவிக்கப்படாத மயிலிட்டி மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான அறப்போர்" எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவம் வசமுள்ள தமது நிலங்கள், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களை உடனடியாகத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
தற்போதும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலங்கள் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்தப்படவில்லை எனவும், அங்கு இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக்காட்டினார்.
"தற்போது இராணுவம் வசமுள்ள 3000 ஏக்கர் நிலங்களில் 80% காடாக மாறியுள்ளது. அவை எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்தப்படவில்லை, மாறாக விவசாயம் போன்ற தேவைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன. இராணுவம் தனது அதிகாரத்தைக் காண்பிப்பதற்காகவே இந்த நிலங்களைத் தடுத்து வைத்துள்ளது. இது அவர்களின் இனவாதக் கொள்கையையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது."
மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தைச் சேர்ந்த தேவரத்தினம் அந்தனி சுபாஷ் கூறுகையில், 'கமாண்டர் பங்களா' என்று அழைக்கப்படும் இராணுவத் தளபதியின் மாளிகை சுமார் 200 தமிழ் குடும்பங்களின் காணிகளை அபகரித்தே கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மயிலிட்டி பகுதியில் எமது காணிக்கு மாதா தேவாலயம் இருந்தது. 2010 இல் இந்தத் தேவாலயம் முழுமையாக இருந்தது, நாங்கள் அங்கு வந்து வழிபாடுகளையும் செய்தோம். ஆனால் 2013 க்குப் பிறகு அது முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. யுத்தம் 2009 இல் முடிந்ததென்றால், ஏன் 2013 இல் தேவாலயம் அழிக்கப்பட்டது? இன்று எமது வீடுகள் இருந்த அடையாளமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது."
போராட்டத்தில் கலந்துகொண்ட முதியவர் ஒருவர் ஆவேசமாகக் கூறுகையில்:
"எங்களுக்கு எமது வீடுகள் வேண்டும். நாங்கள் இலங்கையின் அகதிகள் அல்ல, பிரஜைகள். எமது தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களைப் பறித்து இராணுவம் எங்களுக்கே விற்க முற்படுகிறது. எமது கோவில்கள், தேவாலயங்கள் இருந்த இடங்களில் இன்று பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இராணுவத்தினர் எமது வாழ்வாதாரத்தை முழுமையாக முடக்கியுள்ளனர். எமது பெற்றோர்கள் எமக்கு உரிமையாக்கிய நிலங்கள் இவை, இவை இராணுவத்திற்குச் சொந்தமானவை அல்ல."
யுத்தத்தினால் நில உரிமைகளை உறுதிப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள வடக்கு மக்களின் மேலதிக காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் 2025 மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட இலக்கம் 2430 வர்த்தமானி அறிவித்தல், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு மற்றும் உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு காரணமாக அரசாங்கத்தினால் வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.