கொல்லப்பட்டு 21 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத ஊடகவியலாளர் சிவராமுக்கு வடக்கு கிழக்கில் நினைவேந்தல்!  

கொல்லப்பட்டு 21 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத ஊடகவியலாளர் சிவராமுக்கு வடக்கு கிழக்கில் நினைவேந்தல்!  

தலைநகரில் கடத்தப்பட்டு, அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரின் 21ஆவது நினைவு தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஊடக மையம், முல்லைத்தீவு ஊடக மையம் மற்றும் மட்டக்களப்பு ஊடக மையம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், 2005 ஏப்ரல் 28 அன்று சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத கும்பலால் கடத்திக் கொல்லப்பட்ட 'தராகி' என அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் நினைவாக நடத்தப்பட்டன.

இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதற்காக மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்னால், சிவராமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக மையம் என்பன ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தன.

இதேவேளை, 'தமிழ்நெட்' இணையதளத்தின் முன்னோடி ஆசிரியரான தர்மரத்தினம் சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வை முல்லைத்தீவு ஊடக மையம் ஏப்ரல் 29 புதன்கிழமையும், யாழ்ப்பாணம் ஊடக மையம் ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமையும் முன்னெடுத்திருந்தன.

கொழும்பிலிருந்து வெளியாகும் பல ஊடகங்களுக்குத் தனது புலமைசார் பங்களிப்பை வழங்கிய சிவராமின் நினைவேந்தல் நிகழ்வுகள் எவையும் தென்னிலங்கையில் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

44 ஊடகவியலாளர்கள்:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 44 என 'இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (JDS) அமைப்பு தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் வடக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் என்பதுடன், அவர்கள் எவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான படுகொலை:

1959 ஆகஸ்ட் 11ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்தினம் சிவராம், 2005 ஏப்ரல் 28 அன்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து நான்கு பேரைக் கொண்ட கும்பலால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டார்.

கொல்லப்பட்ட சிவராமின் சடலம் அடுத்த நாள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள கிம்புலா எல வலயத்தின் அதிஉயர் பாதுகாப்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தலையில் சுடப்பட்டிருந்தார்.

படுகொலை செய்யப்படும் போது புகழ்பெற்ற 'தமிழ்நெட்' இணையதளத்தின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சிவராம், 1990 இல் படுகொலை செய்யப்பட்ட தனது சக ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவின் வழிகாட்டலின் கீழேயே ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1997 இல் தமிழ்நெட் இணையதளத்தை ஆரம்பிக்கும் வரை சிவராம் 'தி ஐலண்ட்', 'சண்டே டைம்ஸ்', 'டெய்லி மிரர்', 'வீரகேசரி' மற்றும் 'தமிழ் டைம்ஸ்' ஆகிய ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.

தராகி:

1989ஆம் ஆண்டு 'தி ஐலண்ட்' பத்திரிகையின் தலைமை ஆசிரியர் காமினி வீரக்கோன் அரசியல் ஆய்வாளர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தபோது, ரிச்சர்ட் டி சொய்சாவினால் சிவராம் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

காமினி வீரக்கோன் சிவராமுக்காக உருவாக்கிய புனைபெயர் 'தாரக' (Tharaka) என்பதாகும். ஆனால் அச்சுப் பிழை காரணமாக அந்தப் பெயர் 'தராகி' (Taraki) என அச்சிடப்பட்டது. அந்தப் பிழையான பெயரையே சிவராம் தனது இறுதி மூச்சு வரை தனது புனைபெயராகப் பயன்படுத்தினார்.