அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்!

அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்!

அமெரிக்காவின் மூன்று போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அதற்குப் பதிலடியாக ஈரானிய இராணுவ முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட கப்பல்கள்: ஹோமுஸ் (Hormuz) நீரிணை ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகிய அமெரிக்கப் போர்க்கப்பல்களை இலக்கு வைத்தே ஈரானின் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பதில்: இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க இராணுவம், தமது 'தற்காப்புக்காக' ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், கட்டளை மையங்கள் மற்றும் உளவுத்துறை செயல்பாட்டு மையங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

சேத விபரங்கள்: ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் குற்றச்சாட்டு: ஈரானிய பாதுகாப்புப் பிரிவினர் முன்னதாகத் தெரிவிக்கையில், ஹோமுஸ் நீரிணைக்குள் நுழைந்த தமது எண்ணெய் கப்பல் மற்றும் மற்றொரு கலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், அமெரிக்கா பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளதாகவும் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.

தற்போதைய நிலைமை: ஹோமுஸ் நீரிணையை ஒட்டிய கெஷ்ம் தீவு (Qeshm Island) உள்ளிட்ட பாரசீக வளைகுடா கடற்கரைப் பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் எதிரிப் படைகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை: இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்தியத்தில் பதற்றம் நிலவிய போதிலும், தரப்புகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் இன்னும் அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.