நிதி அமைச்சில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணையத் திருட்டு மற்றும் இது தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்காவின் FBI அமைப்பின் உதவி கோரப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இலங்கைடனான சட்ட அமுலாக்கல் கூட்டிணைவை மதிப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா, முறையான இராஜதந்திர மற்றும் சட்ட வழிகள் ஊடாக முன்வைக்கப்படும் உத்தியோகபூர்வ கோரிக்கைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளின் நேர்மையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக்கொள்வதாகத் தூதரக ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், கொள்கை ரீதியாக நடப்பு விசாரணைகள் அல்லது சட்ட ஒத்துழைப்பின் விபரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கான கடன் கொடுப்பனவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இணையக் குற்றவாளிகள் கணினி முறைமையை ஊடுருவித் திருடியுள்ளனர்.
இது தவிர, அமெரிக்க அஞ்சல் சேவைக்கு (US Post) வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவில் 625,000 அமெரிக்க டாலர் இழக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு (USPS) மாற்றப்பட்ட சுமார் 625,000 அமெரிக்க டாலர் நிதி காணாமல் போனமை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கு முன்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் FBI அதிகாரிகள் இலங்கைக்கு உதவி வழங்கி அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.