தடைகளைத் தகர்த்து நாளை காலை 10 மணிக்கு அமைகிறது தவெக ஆட்சி!

தடைகளைத் தகர்த்து நாளை காலை 10 மணிக்கு அமைகிறது தவெக ஆட்சி!

தவெக தலைவர் விஜய்யை முதல்வராக பதவியேற்கவும், தவெக சார்பில் ஆட்சி அமைக்கவும் கவர்னர் அர்லேக்கர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் கடிதம் வழங்கினார். நாளை (மே 10) காலை 10 மணிக்கு முதல்வராக விஜய்க்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

போதிய ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாமல் தவெக திணறி வந்த நிலையில், பல்வேறு இழுபறிக்குப் பிறகு, திருமாவளவனின் விசிகவும், முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதன்மூலம், விஜய்க்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு 4வது முறையாக கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க விஜய் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக பட்டினப்பாக்கத்தில் இருந்து விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன், கவர்னர் அர்லேக்கரை சந்திக்க விஜய் மற்றும் கூட்டணி கட்சியினர் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால், கவர்னர் அர்லேக்கர் இன்று இரவு 7.10 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதால், விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த விஜய், காரை பாதியிலேயே திருப்பிக்கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார். இது, தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், கவர்னர் அர்லேக்கரின் கேரள பயணம் இரத்து செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்க்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. இதையடுத்து அவர், தன் கட்சியினர், ஆதரவு தெரிவித்த கட்சிகளின் நிர்வாகிகளுடன், கவர்னரை சந்தித்து, கடிதங்களை ஒப்படைத்தார்.

ஆட்சி அமைக்க உரிமையும் கோரினார். அவற்றை பரிசீலித்த கவர்னர் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை விஜய்க்கு வழங்கினார். நாளை 10ம் திகதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்கின்றனர்.

பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4-ம் தேதி காலை 9.30 மணி முதலே விசில் சத்தம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. திமுகவும், அதிமுகவும் அந்நேரம் இரண்டாம் இடத்துக்கு திணறிக் கொண்டிருக்க, தவெக க்ளீன் ஸ்வீப் ஆகுமோ என்ற விவாதங்கள் டிவி மீடியாக்களில் காரசாரமாக ஓடிக் கொண்டிருந்தன.

ஆனால், மாலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது தவெக 108, திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 என எண்கள் நின்றன. பிரதமரும், ராகுல் காந்தியும் வாழ்த்துகளை வாரி வழங்கினர்.

இருந்தாலும், தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை நிலை அது. தவெக தான் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே 59 ஆண்டு கால திராவிடக் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது என்றாலும் கூட பெரும்பான்மை எண்கள் இல்லாததால் ஆட்சியமைக்க முடியாது என்ற ஷாக் அதற்கு அடித்தது. கொண்டாட்டங்களுக்கு ஒரு ஸ்பீடு பிரேக் விழுந்தது.

அப்போதுதான் தமிழக அரசியல் களம் இன்னும் இன்னும் சூடுபிடித்தது. தவெகவும் எண் வேட்டையை தொடங்கியது.

பெரிதும் மெனக்கிடாமலேயே காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு வந்தது. பிரவீன் சக்கரவர்த்தியின் தேர்தலுக்கு முந்தைய பேச்சுக்கள், தமிழகம் வந்தும் ராகுல் காந்தி - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யாதது, அதன்பின்னர் விஜய்யே ‘ரியல் காங்கிரஸ்’ எங்களோடுதான் என்று பேசியது எல்லாமே காங்கிரஸ் நிச்சயம் தவெக பக்கம் தாவும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் அது அவ்வளவு பெரிய ஹைலைட் ஆகவில்லை. அதுவும் ஆதரவுக் கடிதத்தில், காங்கிரஸ் பல பத்தாண்டுகளுக்கு செயல்படுவோம் என்று சொல்லிவிட்டது. எக்காலத்தில் மதவாத சக்திகளோடு கூட்டணி கூடாது என்ற ஒற்றை நிபந்தனையை மட்டுமே வைத்தது.

காங்கிரஸின் நகர்வு தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த இனி மக்களவையில்கூட அவர்கள் அருகில் சீட் வேண்டாம் என்று கனிமொழி கடிதம் எழுத, அகிலேஷ் யாதவ் நான் இருக்கேன் உங்களுக்கு என ஆறுதல் கூற, தேசிய அளவில் இண்டியா கூட்டணி அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தயாராகிவிட்டது.

தவெகவின் வெற்றி தேசிய அரசியல் வரை எதிரொலிக்க, ஆஹா மவுசு கூடுதே என்று விசிலர்கள் குதூகலிக்க விஜய் காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்தோடு ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

அந்த ஆதரவுக் கடித்தோடு சென்று, “எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள்,” என்று கோரியபோதுதான் விஜய்க்கு உண்மையான சிக்கல் ஏற்பட்டு அது ஹைலைட் செய்தியானது. காரணம் அவர் தனிப்பெருங்கட்சி என்று சொல்லியிருந்தால் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருப்பார்; ஆனால் கூட்டணி ஆட்சி என்று சொல்லி காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்க அதனால் அவர் 118 நம்பர் காட்டுங்க என்று அனுப்பிவிட்டார்.

முதலாம் சந்திப்பு இப்படியாக முடிய. தொடர்ந்து இடதுசாரிகள் ஆதரவுக் கடிதங்களோடு ஒரு முறை என மொத்தம் 3 முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றுவந்துவிட்டார் விஜய். ஆனால் நம்பர் தான் முக்கியம் என்று ஆளுநரும் திருப்பியனுப்ப, இன்று இறுதியாக விசிக, ஐயூஎம்எல் என அடுத்தடுத்து ஆதரவுக் கடிதங்கள் வர 4-வது முறையாக ‘எண் தானே வேண்டும் இப்போது 120 உள்ளது,’ என்று கம்பீரமாக கார்கள் புடைசூழ புறப்பட்டுச் சென்றார் விஜய். முதலில் ஆளுநர் மாளிகையை நெருங்கிய போதே, “அப்படியே யுடர்ன் அடித்துச் செல்லுங்கள், ஆளுநர் கேரளா செல்கிறார்,” என்று திருப்பியனுப்பபட்டார் விஜய்.

அது போதாதா... ஊடகங்களும், சமூக ஊடங்களும் ஆளுநர் அனுமதிக்கவில்லை அடுத்தது என்ன என முழங்க. அப்படியான முழக்கங்கள் வந்து கொண்டிருக்கும்போது ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பும் வர அவர் ஆளுநரை சந்திக்க மீண்டும் சென்றார்.

ஒருத்தர் ஆட்சியமைக்க உரிமை கோரவே கஜினி முகமதுபோல் படையெடுக்கிறாரே என்று உச்.. உச் பரிதாபங்களும், நல்லா வேண்டும் என்ற நையாண்டிகளும், டெல்லி சதி, திமுக சதி என்ற கூப்பாடுகளும் டீக்கடை முதல் இன்ஸ்டா கடை வரை அதிர்ந்தது.

இதற்கிடையில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவுக் கடிதம் கொடுத்ததாக தவெகவினர் ஆளுநரிடமே கொண்டு போக, அது போலி என்று டிடிவி சொல்ல, குதிரை பேரம் என்று பேட்டிக் கொடுக்க அது எப்போ என்ன சிக்கலை விஜய்க்கு செய்யுமோ தெரியவில்லை என்று பரபரப்பு வேறு. சந்திப்பு நிறைவடைய காலதாமதம் ஆக அதில் ட்விஸ்ட் வருமோ என்ற கலக்கமும் தவெக ஆதரவாளர்களுக்கு ஏற்பட, நாளை காலை 10.30 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. அதே, நேரு உள் விளையாட்டு அரங்கில் என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும், விக்கிரவாண்டியில் விஜய் திமுக என் அரசியல் எதிரி, பாஜக எனது கொள்கை எதிரி என்று சொல்லி நேரா கோட்டைக்குத் தான் என்று அக்டோபர் 27, 2025-ல் சொன்னதில் இருந்து இன்று மே.9 ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது வரை, ஒரு ஃபுல் லெந்த் பக்கா மாஸ் அரசியல் படம் எடுக்கும் அளவுக்கு சம்ப்வங்கள் நடந்துவிட்டன.

விஜய்க்கு கூடிய கூட்டங்கள் எல்லாம் ஓட்டாக மாறாது என்று சொல்லப்பட்ட நிலையில் அது ஓட்டுகளாக மாறியிருக்கிறது. அப்படி ஓட்டுக்களாக மாற பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் ‘தி ரூட்’ நிறுவனத்தின் தலைவரும், விஜய்யின் மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி தான் இருக்கிறார். தவெகவின் இந்த வெற்றி ஆர்கஸ்ட்ரேடட் வெற்றி என்று சொல்லப்படும் நிலையில், அதுபற்றி பெரிய அளவில் விவாதங்கள் ஒருபுறம் நடப்பதை இங்கு சுட்டிக் காட்டாமல் செல்ல இயலாது.

விஜய்க்கு கரூர் சம்பவமும், தனிப்பட்ட வாழ்வில் மனைவி விவாகரத்து கோரி அந்த மனுவில் நடிகை விவகாரத்தைக் குறிப்பிட்டதும் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. ஆனால் அது தேர்தலில் எதிரொலிக்கவில்லை. அது எதிரொலிக்காதவாறு பார்த்துக் கொண்டதுதான் இளைஞர்களை குறிவைத்து காய்நகர்த்தியது தான் ‘தி ரூட்’ போட்டுத்தந்த மேப்பின் வெற்றி என்கிறார்கள்.

விஜய் வடக்கு மண்டலத்தில் தான் சோபிப்பார், தெற்கு, மத்திய மண்டலங்களிலெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் மண்டலம் தாண்டி விசில் பறந்தது.