மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் அகழ்வாராய்ச்சிப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மே 9 சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்கையில்;
மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 21 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாகவும், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தம் 261 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவற்றில் 260 எலும்புக்கூடுகள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் மேற்பார்வையின் கீழ், இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் ஜூன் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் மேலதிக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து 210 இலட்சம் ரூபா நிதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஏழு மாத இடைவெளிக்குப் பின்னர் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் பணிகள் மீண்டும் தொடங்கின.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலில், முதன்முறையாக 2025 மே 15 அன்று இந்த அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
45 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் 2025 செப்டம்பர் 06 அன்று நிறைவடைந்த போது, சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டன.
இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் குழியின் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழத்திலேயே கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தோண்டி எடுக்கப்படாமல் எஞ்சியிருந்த அந்த ஒரு எலும்புக்கூடு இன்னும் அகழ்வுப் பகுதியிலேயே பாதுகாக்கப்பட்டு வருவதாக சட்டத்தரணி நிரஞ்சன் 2026 ஏப்ரல் 30 அன்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மனித எச்சங்களுடன் இதுவரை 96 ஏனைய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகளின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்கும்.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட மன்னார் சதோச மனிதப்புதைகுழி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.