தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு வடபகுதி மீனவர்களின் கோரிக்கை!

தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு வடபகுதி மீனவர்களின் கோரிக்கை!

தென்னிந்தியாவின் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கையின் வடகடலில் மீன்பிடிப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வடபகுதி மீனவ சங்கம் தமிழகத்தின் புதிய முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மே 10 ஆம் திகதி புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற பிரபல நடிகர் சந்திரசேகர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்து, வட மாகாண ஒருங்கிணைந்த மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

"வடகடல் மீனவர்களாகிய நாம் எமது கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டு எமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க ஏதுவாக, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுப்பதற்கு புதிய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 மீனவ குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு இலட்சம் மக்களின் சார்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம், காரைக்கால், தொண்டி மற்றும் நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் மீனவர்களின் சட்டவிரோத இழுவை மடி (Trawler) மீன்பிடி முறையினால், வடபகுதி மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் அவர்கள், மீனவர்களின் எல்லை தாண்டிய பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமருக்கு கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்ததாகவும், புதிய முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாமல், சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இழுவை மடி மீன்பிடி முறையைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்னராசா வலியுறுத்தினார்.

"நாங்கள் உங்களிடம் எமக்கு உதவி செய்யுமாறு கேட்கவில்லை. உங்களது மீனவர்கள் எமது தொழிலுக்கும், எமது கடல் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல், இலங்கையின் இறையாண்மை மிக்க கடல் எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு மட்டும் நடவடிக்கை எடுங்கள்," என அவர் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.