தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்திய மாநிலங்களில் இலங்கைக்கு மிக நெருக்கமான மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிவருகிறது.
காலாகாலமாகத் தமிழகத்துக்கும் இலங்கைக்குமான தொடர்பாடல் வலுப்பெற்றிருப்பதை யாவரும் அறிவர். குறிப்பாக, ஈழத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு அரசியல் என்பது மிகமுக்கிய தளமாக விளங்குவதை மறுப்பதற்கில்லை.
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தமிழக அரசியலின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இந்நிலையில்தான், தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருக்கிறார்.
மிகக் குறுகிய காலத்துக்குள் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட விஜய், தனது அபரிமிதமான வெளிப்படுத்தலை நிரூபித்திருக்கிறார்.
இலங்கையிலுள்ள தமிழர்கள்கூட இலங்கையில் நடைபெறும் தேர்தலைப் போன்ற பார்வையிலேயே தமிழகத் தேர்தலையும் இம்முறை பார்த்திருந்தனர். அது விஜயின் மீது வைத்திருந்த நம்பிக்கை மாத்திரமன்றி, அவரின் வெற்றியின் மூலம் ஈழத் தமிழர்களுக்கும் நம்மை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.
சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்திலும் விஜயின் வெற்றி எதிரொலித்ததை அவதானிக்க முடிந்தது. மாறுபட்ட கருத்துகள் பல வெளிப்பட்டிருந்தன. இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட பல அரசியல் பெரும்புள்ளிகள் தமது வாழ்த்துகளைத் தமிழக முதலமைச்சருக்கும் தெரிவித்திருந்தனர்.
ஆனாலும், ஒருசில சிங்களக் கடும்போக்காளர்கள் இவ்வெற்றியை வேறுவிதமாகக் கேலி செய்ததையும் கவனிக்க முடிந்தது. அதில் குறிப்பாக, கச்சதீவு விடயம் மிகப்பெரும் பேசுபொருளாகியிருந்தது.
இத்தகைய சவால்கள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் யதார்த்த நிலையை எவ்வாறு கையாளப்போகிறார் விஜய் என்ற எதிர்பார்ப்புத்தான் அதிகரித்திருக்கிறது.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் தன்னுடைய முதல் உரையில் குறிப்பிட்ட சில விடயங்கள் அவதானிப்புக்குரியவை.
'முன்பு இருந்த தமிழக அரசு கஜானாவைச் சுத்தமாகக் காலி செய்து விட்டுச் சென்றுவிட்டனர். என் அரசில் ஒரே அதிகாரம்தான். பல அதிகார மையங்கள் எல்லாம் இல்லை. மிக இக்கட்டான நிலையில் இந்த அரசாங்கத்தை நான் பொறுப்பேற்றிருக்கின்றேன். மிக அதிக கடன் தொகை, திறைசேரியே காலியாகியிருப்பதாகத் தெரிகின்றது. உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் என்ன இருக்கின்றது இல்லை என்பது. அனைத்தையும் பார்த்த பிறகு என்ன விவரங்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக நான் உங்களுக்கு வெளியிடுவேன். இவற்றைச் சரிசெய்ய எனக்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். இது மக்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை மிக உறுதியாக வைத்திருப்பேன்' என உருக்கமான உண்மை நிலவரத்தைத் தனக்கு வாக்களித்த மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியிருந்தார் விஜய்.
அதுமாத்திரமன்றித் தனது அரசாங்கம் 'வெளிப்படையான அரசாங்கம்' என்பதை மக்களுக்கு வெள்ளை அறிக்கையூடாக நிரூபிப்பேன் எனவும் தமிழக முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டிருப்பது கவனிப்புக்குரியது.
இதேபோன்றதொரு வெளிப்படை நிலமை இலங்கை ஆட்சியாளர்கள் மத்தியில் தற்போது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. தேர்தல் காலங்களின் அள்ளவீசிய வெற்று வாக்குறுதிகளைக்கூடக் காப்பாற்ற வக்கற்றவர்களாகவே அநுர ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.
அதுமாத்திரமன்றி, வெளிப்படைத்தன்மை என்பதை எள்ளளவும் கணக்கிலெடுக்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில், தமிழக முதலமைச்சர் விஜயின் முன்மாதிரியான வெளிப்படைப் பேச்சு அவதானிப்புக்குரியது.
விஜயைப் பொறுத்தவரையில் அவர் இப்போது பொறுப்பெடுத்திருக்கும் முதலமைச்சர் பதவியென்பது மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அது அவருக்குப் பெரும் தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது.
இருந்தபோதிலும், மக்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாதகமின்றி ஆட்சி நடத்த வேண்டுமென்ற மனப்பான்மை அவரை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் என நம்பலாம்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தமட்டில், தமிழகத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, மீனவர் பிரச்சினை, அகதிகள் வாழ்வுரிமைப் பிரச்சினை என்பன மிகமுக்கிய இடம்வகிக்கப்போகின்றன.
அவற்றையெல்லாம் தமிழக முதலமைச்சர் விஜய் எவ்வாறு கையாளப்போகின்றார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.