போர்நிறுத்தம் ஆபத்தில்?

போர்நிறுத்தம் ஆபத்தில்?

ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் தற்போது பல விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டாததே இதற்குக் காரணமாகும்.

அனைத்து முன்னணிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருதல், போர்க்கால இழப்புகளுக்கு நட்டஈடு வழங்குதல், அமெரிக்காவின் கடற்படை முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டு வருதல், மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்குதல் மற்றும் ஈரானிய எண்ணெய் விற்பனையை மீண்டும் ஆரம்பித்தல் ஆகிய கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும், தற்போது கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ள 'ஹோர்முஸ்' (Hormuz) நீரிணையின் இறையாண்மை குறித்தும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் நடைமுறையிலுள்ள போர்நிறுத்தத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஈரானின் இந்தப் பதில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் முன்மொழிவாக இருந்தது.

இதேவேளை, பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதன் காரணமாக, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 3% அதிகரித்து, ஒரு பேரல் 104 டொலர்களைத் தாண்டியுள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பிப்பதற்கு முன்னர், உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் குறுகிய கடல் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்பட்டது. அன்றிலிருந்து இது மோதலின் முக்கிய அழுத்தப் புள்ளியாக மாறியுள்ளது.