ஊடக அடக்குமுறையும், ஊடகவியலாளர்கள் சுதந்திரமான செய்தி சேகரிப்பில் ஈடுபடமுடியாத தன்மையையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வருகின்றமை கண்டிப்புக்குரியது.
அரசின் எடுபிடிகளாகச் செயற்படுபவர்களும், அரசியலில் உயர்பதவி வகிக்கும் சிலரும் இவ்வாறான முட்டுக்கட்டைகளை ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து திணித்து வருகின்றனர். ஊடக அடக்குமுறையை மிகக் கேவலமாக அரங்கேற்றிவரும் தற்போதைய ஆட்சியார்களின் போக்குக்குக் கடிவாளம் இடவேண்டிய கடப்பாடு உணரப்படுகிறது.
அடக்குமுறை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், மலையத்தில் ஊடுவியிருக்கும் அதிகாரப் புல்லுருவிகளின் கபடத்தனம் மிகக் கவனிப்புக்குரியதாக மாறியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள்தவிர மாற்றுக் கட்சியினர், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பெருந்தோட்டப்பகுதி பிரச்சினையை ஆராய வரக்கூடாது, அது பற்றிப் பேசக்கூடாது என்ற தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச அரசியல்வாதிகளின் மிரட்டலானது அடக்குமுறையின், அராஜகத்தின் உச்சகட்டமாக இருக்கிறது.
மாற்றம், மாற்றம் எனக் கூறிக்கொண்டு - கூவிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தித் 'தோழர்கள்' வன்முறை அரசியலைக் கையிலெடுப்பது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.
தோட்டப் பகுதிகளுக்கோ அல்லது பிரச்சினை இருக்கின்ற எப்பகுதிக்கோ யார், யார், எந்தெந்த ஊடகங்கள் வரவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அப்படி முட்டுக்கட்டை போடப்படுமாக இருந்தால், அது ஊடக சுதந்திரத்தின்மீது விழும் பாரிய இடியாகவே பார்க்கப்படவேண்டும்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களின் அடக்குமுறை ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை வெகுவாக நெரிக்கத் தொடங்கியிருப்பது துரதிர்ஷ;டவசமானது.
அண்மையில் நுவரெலியா, டெல்மார் தோட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் சென்றிருந்தனர். டெல்மார் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் கேட்டறிந்து, அது பற்றி ஆராய்வதற்கே அவர்கள் சென்றிருந்தனர்.
ஆனால், தோட்டத்துக்கு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்களை மக்கள் சந்திக்கக்கூடாது என தீவிர பிரசாரத்தைத் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
அதுமாத்திரமன்றி, தங்களின் அடியாள்களை ஏவிவிட்டும் தேவையற்ற அழுத்தங்களை ஊடகவியலாளர்கள் மீது திணித்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும், அவர்களால் அழைத்துவரப்பட்டவர்களுமே இவ்வாறு ஊடக சுதந்திரத்துக்கு, சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்டிருக்கின்றனர்.
காணி உரிமை, அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலை பற்றிப் பேசினால் தேசிய மக்கள் சக்தியின் அடிவருடிகள் கொதித்தெழுகின்றனர்.
இப்படியான சிரிப்புத் தோழர்களின் சிற்றின்ப அரசியலானது, மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர்.
மத்தியில் இருக்கின்ற அமைச்சர்களும் ஊடகங்களை மதிக்கத் தெரியாதவர்களாகவும், ஊடக அழுத்தங்களைப் பிரயோகிப்பவர்களாகவும் இருக்கின்றமையால், பிற பிரதேசங்களின் இப்படிப்பட்ட காவாலிகளின் கூக்குரல்களும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றமை மிகக் கேவலமானது.
இத்தகைய ஊடக அடக்குமுறைகள், மலையகத்தில் மாத்திரமன்றி இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கின்றமை கண்கூடு.
பிராந்திய ஊடகவியலாளர்களைத் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் நேரடியாகவே அச்சுறுத்தி வருகின்ற பல சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அதுமாத்திரமன்றி, ஊடக நிறுவனங்கள் மீதும் அநாவசிய அழுத்தங்களைத் தற்போதைய ஆட்சியாளர்கள் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இத்தகைய அழுத்தங்களினூடாக, ஊடக அறிக்கையிடலை மட்டுப்படுத்தலாம் எனப் பகல்கனவு காண்கிறது அநுர அரசு. அது ஒருபோதும் நனவாகாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சுதந்திரம், மாற்றம் என வார்த்தைகளால் மாயாஜாலம் காண்பித்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தொடர் அழுத்தங்களைத்தான் சுதந்திர ஊடக அமைப்புகள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
இது, சுதந்திர ஊடகவியலுக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊடக அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அநுர அரசியன் அடிவருடிகள், தங்களின் அதிகாரக் கரங்களை சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது நீட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்ற மமதையில் எதையும் செய்துவிடலாம் என்று பகல்கனவு காணக்கூடாது.
அடக்குமுறை என்பது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும் என்பதைக் கடந்தகாலங்கள் எமக்குக் கற்பித்திருக்கின்றன. அதனைத் தற்போதைய ஆட்சியாளர்கள் தக்கபாடமாகக் கொண்டு, சுயாதீன ஊடகத்துறையின் நன்மதிப்பைத் தக்கவைப்பதற்குத் தங்களாலான பங்களிப்பைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.