இலங்கையில் கடும் மழை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!  

இலங்கையில் கடும் மழை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!  

இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய வானிலை ஆய்வுத் திணைக்களம் பின்வரும் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது:

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

மேல், சபரகமுவா, மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்கள்.

மழையின் அளவு:

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகள்:

நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மக்களுக்கான அறிவுறுத்தல்:

இடி மின்னலுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிவேக வீதிகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பகல் நேரத்திலும் இருள் மற்றும் பனிமூட்டமான நிலை காணப்படுவதால், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு வாகனங்களைச் செலுத்துமாறும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனத்தின் வேகத்தை மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் என்ற வரம்பிற்குள் வைத்துக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்திலும் போதிய இடைவெளியைப் பேணியும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், அதிக வேகத்தில் செல்லும் போது திடீரெனத் தடை இடுவது ஆபத்தானது என்றும் அந்த அதிகார சபை பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.

கெஸ்பேவவில் 204 மி.மீ மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடையில் 145.5 மில்லிமீற்றரும், வத்துபிடிவலவில் 105.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கிலிமலே பகுதியில் 121 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமவில் 102.5 மில்லிமீற்றரும், ஹொரணையில் 101.5 மில்லிமீற்றரும் மழை பதிவாகியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் பலத்த மழை

தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் பலத்த மழையுடன் கூடிய அடர்ந்த மூடுபனி நிலவுகிறது.

இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மற்றும் அதன் கிளை வீதிகளிலும் இவ்வாறான அடர்ந்த மூடுபனி நிலை காணப்படுகிறது.

எனவே, அவ்வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு, மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் ஓட்டுநர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மண்சரிவு குறித்து NBRO விடுத்துள்ள அறிவிப்பு

நாடு முழுவதும் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக, மலைப்பாங்கான பகுதிகளில், குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவுறுத்தியுள்ளது.

பலத்த மழையுடன் நிலச்சரிவு கள், மண் சரிவுகள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமானது என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய, வீடுகளைச் சூழவுள்ள வடிகால் அமைப்புகளைச் சீர்செய்து மழைநீர் விரைவாக வழிந்தோடுவதற்கு வழிவகை செய்யுமாறும், வீட்டிற்கு மேலாக அமைந்துள்ள பாரிய மரங்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுகளுக்குப் பின்னால் உள்ள உயர்ந்த மண் திட்டுகள் ஊடாக மழைநீர் பாயாதவாறு பாதுகாப்பு வடிகால் அமைப்புகளை அமைத்துக்கொள்ளுமாறும், கூரையிலிருந்து விழும் நீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயப் பகுதிகளில் உள்ள மக்கள்மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நிலைகள் தென்பட்டால் உடனடியாக கிராம உத்தியோகத்தர் அல்லது உரிய அரச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசர அனர்த்த நிலைமையின் போது, முடிந்தவரை விரைவாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுதல், அயலவர்களுக்குத் தெரியப்படுத்துதல் மற்றும் உரிய அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்குதல் ஆகியவை மிகவும் முக்கியமானது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.