எரிபொருள் மானியக் கேள்விகளுக்கு மத்தியில் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளிப்பதாக IMF அறிவிப்பு

எரிபொருள் மானியக் கேள்விகளுக்கு மத்தியில் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளிப்பதாக IMF அறிவிப்பு

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த கடன் ஆலோசனைகளை நிறைவு செய்வது அதன் நிறைவேற்றுச் சபையின் (Executive Board) ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும், இதற்கான கூட்டம் வரும் வாரங்களில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

மே 14 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த IMF ஊடகத் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack), கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி IMF ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ஊழியர் மட்ட உடன்பாடு (Staff-level agreement) எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர், மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவினங்களை ஈடுசெய்யும் விலை நிர்ணய முறையை (cost-recovery pricing) மீண்டும் நிலைநிறுத்துதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நிதியளிப்பு உத்தரவாதங்களை நிறைவு செய்தல் உள்ளிட்ட சில பூர்வாங்க நடவடிக்கைகள் (prior actions) தேவைப்படுவதாக அவர் கூறினார்.

இந்தச் சபை ஒப்புதல் கிடைத்தவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கும் என்றும் ஜூலி கோசாக் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் மானியம் குறித்த கேள்வி:

டீசல் லீற்றருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவது உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தின் எரிபொருள் மானியக் கொள்கையானது, IMF இன் செலவினங்களை ஈடுசெய்யும் விலை நிர்ணயக் கட்டமைப்பிற்கு இணங்குகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

எனினும், இத்திட்டத்திற்குச் செலவினங்களை ஈடுசெய்யும் விலை சீர்திருத்தங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகிய இரண்டும் அவசியம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பொருளாதார அதிர்ச்சிகளும் வளர்ச்சியும்:

சமீபகாலமாக இலங்கை 'டிட்வா' புயல் (Cyclone Ditwah) மற்றும் மத்திய கிழக்கு மோதல்களின் பரந்த வெளிப்புற தாக்கங்கள் உள்ளிட்ட இரு பெரிய அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இவை அந்நாட்டுப் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதித்துள்ளதாகவும் கோசாக் குறிப்பிட்டார்.

இருப்பினும், இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் நல்ல பலன்களைக் காட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2025ஆம் ஆண்டின் வலுவான நிதிச் செயல்பாடு, கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், 5 சதவீத பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவாட்டக் காலத்திற்குப் (deflation) பிறகு பணவீக்கம் மீண்டும் நேர்மறையான நிலைக்குத் திரும்பியுள்ளமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தனது சீர்திருத்தப் நிகழ்ச்சி நிரலைத் தொடர்வதற்கு ஆதரவளிக்க IMF தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது என்று கூறிய அவர், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தைப் பேணுவதற்காக அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் தங்களது பங்களிப்பு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.