பிரித்தானிய (UK) சமூகத்தைக் குறிவைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு எதிரான வ්යාஜத் தகவல்களைப் பரப்பிய சமூக ஊடகப் பக்கங்கள் சில இலங்கையிலும் மற்றும் வேறு சில நாடுகளிலும் உள்ள நபர்களால் இயக்கப்பட்டு வந்ததை பிபிசி (BBC) நிறுவனம் கண்டறிந்துள்ளது.
பிபிசி பனோரமா (BBC Panorama) மற்றும் 'டாப் கமெண்ட்' (Top Comment) போட்காஸ்ட் இணைந்து நடத்திய இந்த விமசனத்தின்படி, பிரித்தானியாவின் 'யார்க்ஷயர்' (Yorkshire) பகுதியில் இருந்து இயங்குவதாகக் கூறிக்கொண்ட "Great British People" என்ற பிரதான முகநூல் பக்கம், உண்மையில் இலங்கையிலுள்ள ஒரு நபரால் இயக்கப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு எதிரான போலிப் போராட்டக் காட்சிகளைப் பகிர்ந்த "Britain Today" என்ற பக்கமும் இலங்கையிலிருந்தே இயக்கப்படுவதாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மைக் கருவிகள் (Transparency tools) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பக்கங்கள் பிரித்தானியாவின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து அழியப் போவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் AI வீடியோக்களை வெளியிட்டிருந்தன.
குறிப்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 'ஷரியா சட்டம்' (Sharia law) அமல்படுத்தப்பட்டது போன்ற போலித் தோற்றங்கள், எதிர்கால பிரித்தானிய நகரங்கள் வீழ்ச்சியடைவது போன்ற காட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி ரீச் (Engagement) பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு எதிரான கதையாடல்கள் (Narratives) இதில் உள்ளடக்கப்பட்டு இருந்தன.
பின்னணி மற்றும் காரணம்: இலங்கை, அமெரிக்கா, வியட்நாம், மாலைத்தீவு மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த ஒன்றோடொன்று தொடர்புடைய பல கணக்குகள் (Accounts) இவ்வாறான உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சில உள்ளடக்க உருவாக்குநர்கள் (Creators), பக்கங்களின் ஈடுபாட்டை (Engagement) அதிகரித்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவே (Monetisation) இவ்வாறான போலி உள்ளடக்கங்களை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த நெட்வொர்க்கை இயக்குபவர்களில் சிலர் வெறும் கிளிக்குகள் மற்றும் பணத்திற்காகவே இதனைச் செய்துள்ளதாகத் தோன்றினாலும், இத்தகைய உள்ளடக்கங்கள் சமூகத்தில் தவறான கருத்துக்களை விதைத்து, பரந்த அளவிலான தவறான தகவல் பரப்புரை முயற்சிகளுக்கு (Misinformation campaigns) வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.