ஒரு நாட்டின் அடிநாதமாகவும் சுயாதீனமாகவும் இயங்கவேண்டிய கட்டமைப்பென்றால் அது நீதித்துறைதான். அத்தகைய நீதித்துறையிலும் அதன் தீர்ப்புகளிலும் தலையிடுவதென்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறிக்கொண்ட தற்போதைய ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தியினரும், அதே சுயாதீன நீதித்துறையில் அநாவசியமாக மூக்கை நுளைப்பதுதான் தற்போதைய வேடிக்கையான விடயமாக மாறியிருக்கிறது.
பொதுவாகவே ஊடகப் பரப்பில் நீதிமன்ற அறிக்கையிடல் என்பது மிக நுணுக்கமான அணுகுமுறைகளைக் கொண்டதொன்றாகும். ஒருசில பிசகுகள் ஏற்படுமாக இருந்தாலும் அவை நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும். நிலைமை அப்படியிருக்கையில், இலங்கை நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அண்மைய மே தின உரையின்போது நீதித்துறையை வம்புக்கிழுத்திருக்கிறார்.
'எதிர்வரும் காலத்தில் ஊழல்கள் தொடர்பில் வெளிவரவுள்ள நீதிமன்றத் தீர்ப்பைக் கைதட்டிக் கொண்டாடுவதற்குத் தயாராகுங்கள்' என நுவரெலியாவில் நடைபெற்ற மே தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர உரையாற்றியிருந்தார். இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். சுயாதீனமான நீதித்துறையின் தீர்ப்பு இவ்வாறுதான் அமையும் என்பதை எவ்வாறு ஒரு ஜனாதிபதி தெரிவிக்கலாம் என்ற ஆதங்கம் அனைத்துத் தரப்பிடமிருந்தும் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
அதில் குறிப்பிடத்தக்கதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காட்டமாக கருத்துக் கவனத்துக்குரியது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துகள் நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளது. மே 25ஆம் திகதி வழங்கப்படவுள்ள ஒரு தீர்ப்பு குறித்துக் குறிப்பிடுகையில், அந்தத் தீர்ப்பு வெளியானதும் பொதுமக்கள் அதைப் பாராட்டிக் கைதட்ட முடியும் என்று கூறியிருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த உரையானது நீதித்துறை செயல்பாடுகளில் வெளிப்படையாகத் தலையிடுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதாகவும் எவ்வித அச்சமும் அல்லது வெளிப்புறத் தாக்கங்களும் இன்றி நீதியை நிலைநாட்ட வேண்டியது நீதித்துறையின் அடிப்படைப் பண்பாகும் எனவும் குறிப்பிட்ட அச்சங்கம், ஜனாதிபதியின் இத்தகைய கருத்துகள் நீதிபதிகளின் சுதந்திரமான முடிவெடுக்கும் ஆற்றலை மற்றும் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் எனவும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்புகளின்படி, நீதித்துறைக்கு எதிராக நிறைவேற்று அதிகாரத்திடமிருந்தோ அல்லது வேறு தரப்பிலிருந்தோ வரும் எந்தவோர் அச்சுறுத்தலையும் தாங்கள் தொடர்ந்து எதிர்ப்பதாகச் சட்டத்தரணிகள் சங்கம் மீள வலியுறுத்தியுள்ளதுடன், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அந்தச் சங்கம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தீர்ப்பு வரமுன்னரே, இத்தகைய தீர்ப்புத்தான் வருமென ஜனாதிபதி எதிர்வுகூரியிருப்பதனூடாக நீதித்துறையின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதுவே முன்னைய காலத்தில் எந்தவொரு ஜனாதிபதி இவ்வாறான கருத்தைத் தெரிவித்திருந்தாலும், முதலில் கொந்தளிக்கும் நபராக அநுர குமார திஸாநாயக்க இருந்திருப்பார் என்பதை யாவரும் அறிவர்.
ஆனால், தற்போது அவரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்துகொண்டு, இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பதென்பது மிகக் கேவலமாகது மாத்திரமன்றி நீதித்துறையின் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
'ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி' என்பதுபோல், தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது எதையும் தாறுமாறாக எதிர்ப்போம், ஆனால் ஆட்சியில் அமர்ந்தால் அனைத்திலும் நாங்கள் தலையிடுவோம் என்பதுபோல்தான் ஜனாதிபதியின் அண்மைய செற்பாடுகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன.
அதற்கு ஒத்தூதுவதுபோல் அமைச்சரவைப் பேச்சாளர்களும் ஏனைய அமைச்சர்களும் சாமரம் வீசிக்கொண்டிருப்பது விசித்திரமானது. ஆகையால், சுயாதீனமாக நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிடுவதை உடனடியாக அரசாங்கம் கைவிட வேண்டும்.
அதுமாத்திரமன்றி, முன்னுதாரமாகச் செயற்படவேண்டிய தற்போதைய ஆட்சியாளர்களே தங்கள் ஆட்சிமுறைமையைக் கேள்விக்குட்படுத்துவது ஏற்புடையதல்ல. இதனால்தான், எந்தவொரு தீர்வுக்கும் இலங்கை நீதித்துறையை நம்பியிருப்பது மிகமிக ஆபத்தானது என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கூறிவருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையைத் தற்போது யதார்த்தமாகவே புரிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கிறது.