கொங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு: அவசர நிலை பிரகடனம்!

கொங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு: அவசர நிலை பிரகடனம்!

கொங்கோ குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் நோய் காரணமாக, சர்வதேச ரீதியில் அவதானிக்கப்பட வேண்டிய பொது சுகாதார அவசர நிலை (Public Health Emergency of International Concern) ஒன்றைப் பிரகடனப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களின்படி, வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நேற்று (16) வரையான காலப்பகுதியில், கொங்கோவின் மூன்று சுகாதார வலயங்களில் ஆய்வுகூடங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட 8 நோயாளர்களும், 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்களும், 80 சந்தேகத்திற்கிடமான மரணங்களும் பதிவாகியுள்ளன.

உகாண்டா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவும் 'புந்திபுஜியோ' (Bundibugyo) வைரஸினால் ஏற்படும் எபோலா நோயின் தாக்கத்திற்கு அமைய, கொங்கோவின் இட்டூரி (Ituri) பகுதியின் சில சுகாதார வலயங்களில் அசாதாரண கொத்தணிகள் (Clusters) பதிவாகியுள்ளதுடன், இட்டூரி மாகாணம் மற்றும் வடக்கு கிவு (North Kivu) முழுவதும் சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, வைரஸ் குருதிப்பெருக்கு காய்ச்சல் (Viral Hemorrhagic Fever) ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதார ஊழியர்கள் மத்தியில் குறைந்தது நான்கு மரணங்களாவது பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச ரீதியிலான ஆபத்து மற்றும் அண்டை நாடுகளுக்கான எச்சரிக்கை: இந்தச் சம்பவமானது சர்வதேச ரீதியிலான நோய் பரவல் ஊடாக ஏனைய நாடுகளுக்கும் பொது சுகாதார ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த மே 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கொங்கோவிலிருந்து வருகை தந்த இருவர் உகாண்டாவின் கம்பாலா (Kampala) நகரில் எபோலா நோயாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் கம்பாலாவிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கோவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகள், மக்கள் நடமாட்டம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் தொடர்புகள் மற்றும் தொடர்ச்சியான தொற்றுநோயியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த நோய் மேலும் பரவக்கூடிய அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்தத் தொற்றின் அளவைப் புரிந்துகொள்வதற்கும், கண்காணிப்பு, தடுப்பு மற்றும் பதிலளிப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் திறனை உறுதி செய்வதற்கும் இந்தத் தருணத்தில் சர்வதேச ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அவசியமானது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.