வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு துக்க தினம். இது ஒரு கறுப்பு தினம். எமது இதயத்தை ரணமாக்கிய ஒரு தினம். அன்று எமது இனம் எப்படி துடிதுடித்திருக்கும். எப்படி வேதனைப்பட்டிருக்கும். அந்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈழம் என்று மலரும் என்று எனது மனம் தினம் தினம் ஏங்குகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன் காங்கிரஸ் கரம் நீட்டுகிறது என்றவுடன் இன்று திமுக கவலைப்படுகிறதே, இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.
அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து சிங்கள இராணுவத்துக்கு துணை போனார்களே எப்படி? என்னுடைய தொப்புள்கொடி பந்தங்களுக்கு அந்த துன்பத்தை அள்ளிக் கொடுத்தார்களே எப்படி? முள்ளிவாய்க்காலில் அன்று இரத்த ஆறினை ஓடவிட்டார்களே எப்படி? என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத் தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர்.
கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது மௌனிக்கப்பட்டது.
இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. இந்த யுத்தத்தில் பல போர் குற்றங்கள் இடம்பெற்றன. ஆனால் 17 வருடங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட இனம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் முடிவுக்கு வந்தால்தான் முள்ளிவாய்க்கால் மண்ணில் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும்.
எமது தொப்புள்கொடி உறவுகள் உயிர்களை, உடைமைகளை இழந்து நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத்தமிழ் உறவுகளுக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை அந்த உறவுகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
என்றும் ஈழத்தமிழர்களின் நிழலாக இந்த நிழல்கள் ரவி இருப்பார் என உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.