முள்ளிவாய்க்காலுடன் முடிவடையா சாபக்கேடு!

முள்ளிவாய்க்காலுடன் முடிவடையா சாபக்கேடு!

ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி இலங்கையில் இருவேறு விதமாக நினைவு கூரப்படுகிறது. வடக்கில் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் "முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும்", தெற்கில் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை நினைவுகூரும் "ரணவிரு நாளாகவும்" இது நினைவுகூறப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே தத்துவம் என்ற முழக்கம், பல ஆண்டு காலமாக நாட்டில் ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தும், ஏன் இந்த இருவேறு வழிமுறைகள். வடக்கில் உயிரிழந்தவர்கள் இலங்கையர்கள் இல்லையா? அதுவும் மனித உயிர்கள் இல்லையா?

இது தான் இந்த நாட்டின் சாபக்கேடு. ஒரே நாடு, எமது மக்கள் என்ற எண்ணங்கள் மேலோங்கியிருந்தால், இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்பட்டிருக்காது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்காது. இன்று இந்த “மே 18 நினைவுதினம்” என்ற ஒரு நாள் ஏற்பட்டிருக்காது.

தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தைக் கருவறுக்க, பேரினவாதம் பேயுருக்கொண்டு இனவழிப்புச் சந்நதமாடி, பல இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரக் கதையின் அவல அத்தியாயம் ஒன்று இத்தினத்தில்தான் முள்ளிவாய்க்காலோடு முடிவற்றது.

தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தைக் கருவறுக்க பௌத்த - சிங்களப் பேரினவாதம் பேயுருக்கொண்டு, இனவழிப்புச் சந்நதமாடி, பல இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரக் காதையின் அவல அத்தியாயம் ஒன்று இத்தினத்தில்தான் முள்ளிவாய்க்காலோடு முடிவற்றது.

அதனால் ஈழத் தமிழர்களின் ஆன்மாவில் ஆற்ற முடியாத பெரும் வடுவாக ஆளப் பதிந்துபோன ஒரு தினம் இது. ஆயினும், முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப் பேரவலம் தமிழினத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவோ அல்ல. நீண்ட தொடரான இனவழிப்பின் ஆழமான ஓர் அங்கம் மட்டுமே அது.

அவர்களின் மரணத்துக்குக் காரணமான கொடுங்கோன்மையாளர்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவான நீதி விசாரணைப் பொறிமுறையின் முன் நிறுத்தி, உண்மைகளை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளை அடையாளப்படுத்தி, பொறுப்புக் கூறலை நடைமுறைப்படுத்தச் செய்து, பேரினவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலம் நமது அந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்கும் தமிழர் தேசத்தின் மீட்சிக்கும் உறுதியாக நிற்போம் என்று இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சமயத்தில் பிரதிக்ஞை செய்ய வேண்டும்.

தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பால் ஈழத்தமிழினத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய சவால்களை உள்ளடக்கிய 'முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2026' உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

1. பூகோள அரசியலும் தமிழினமும்

அமெரிக்கா உள்ளிட்ட ஏக துருவ நாடுகளுக்கும், சீனா, ரஷ்யா போன்ற பல்துருவ நாடுகளுக்கும் இடையிலான வல்லாதிக்கப் போட்டியில், பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப, எமது தந்திரோபாய உத்திகளை மீளமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

2. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு

ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், முன்னெப்போதும் இல்லாதவாறு நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள-பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சைவ சமயத் தலங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. தமிழர்களின் பூர்வீக வரலாறு சிதைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படும்

ஆய்வுகள் திணிக்கப்படுகின்றன. இளைய தலைமுறையைச் சிதைக்க 'போதைப்பொருள்' ஒரு போர் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றது.

3. சர்வதேச நீதி

தமிழினப் படுகொலைக்கான நீதிப் பொறிமுறைகளைச் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகத் திரிபுபடுத்தி வருகின்றது. நிலமீட்புப் போராட்டங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான குரலையும் வன்முறையால் ஒடுக்குவதை சர்வதேச சமூகம் உற்றுநோக்க வேண்டும்.

4. புலம்பெயர் உறவுகளுடனான பிணைப்பு

தாயகத்தையும் புலம்பெயர் தமிழர்களையும் பிரிக்கச் சிங்கள அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, 'தொப்புள்கொடி உறவை' மேலும் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐந்து அம்ச சபதம்

இந்த இரத்த சாட்சியமான மண்ணில் நின்று பின்வரும் ஐந்து அம்சக்கோரிக்கைகளை பிரகடனம் முன்

வைத்துள்ளது.

1. தாயகப் பாதுகாப்பு: சிங்கள - பௌத்தமயமாக்கலைத் தடுத்து, தமிழ் தேசத்தைப் பாதுகாத்தல்.

2. சர்வதேச நீதி: குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல்.

3. சுயநிர்ணய உரிமை: தமிழர்களின் இறையாண்மையையும், சுயாட்சியையும் அங்கீகரிக்க

வலியுறுத்தல்.

4. இன அழிப்புத் தடுப்பு: ஈழத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்துதல்.

5. மக்கள் பலம்: தமிழ்த் தேசிய நம்பிக்கையின் கீழ் அணிதிரண்டு, அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து

போராடுதல்.

'மே 18 என்பது வெறும் நினைவுநாள் மட்டுமல்ல, அது தமிழின அழிப்புக்கு எதிரான தேசிய எழுச்சி நாள்' என்கின்ற அறைகூவலுடன் இந்தப் பிரகடனம் நிறைவு பெற்றது.

முள்ளிவாய்க்கால் அனர்த்தம் என்பது சிங்கள, பௌத்த இனவெறி அடக்குமுறையின் முடிவல்ல. அந்தக் கோரக் கொடூர வெறித்தனத்த்தின் ஒரு கட்டம் மட்டுமே. 2009 வரை முன்னெடுக்கப்பட்ட அந்தக் கொடூர இனவழிப்பு என்ற பேரினவாதத்தின் நாசகார நடவடிக்கைகள் வேறு வழிகளில் இப்போதும் மோசமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆகையினால் அதற்கு எதிராகத் தமிழினம் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான அரசியல் போக்கும்,போராட்டமும் கூட முடிவடைந்து விடவில்லை. அது இன்னொரு இயங்கியலுக்கான, மற்றொரு போக்குக்கான, போராட்டத்துக்கான ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அதில் நாம் தவறியிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. அது குறித்துச் சிந்தித்து, காலம் பிந்தியேனும் புதிய, சாத்தியயமான முறையில் அதைக் கட்டமைப்பது குறித்து இன்று உறுதி கொள்வோம்.

முள்ளிவாய்க்கால் என்பது எமது பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அது அடக்குமுறையின் குறியீடும் கூட. அந்த அடக்குமுறைக்கு எதிராக புதிய, காத்திரமான - வலுவான - முறைமையில் கனன்று எழ நாம் உறுதி கொள்ள வேண்டும்.

அதற்கு, கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட நம் உறவுகளை நினைத்து, அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் மனத்தில் பதித்து, அவர்களின் குருதி உறைந்து சிவந்துபோன அந்த முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நாம் சபதம் எடுக்க வேண்டும்.